சினிமா

''ஒரு தயாரிப்பாளராக நான் தோற்றுவிட்டேன்'' - விஷ்ணுவிஷால் வேதனை

''ஒரு தயாரிப்பாளராக நான் தோற்றுவிட்டேன்'' - விஷ்ணுவிஷால் வேதனை

Sinekadhara

FIR திரைப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளையும் ஒரே மேடையில் சேர்க்க முடியவில்லை என விஷ்ணு விஷால் வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் தான் தயாரிப்பாளராக தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்த எஃப்.ஐ.ஆர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றியடைந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை விஷ்ணு விஷால், இயக்குநர் ஆனந்த், நடிகை ரைசா வில்சன் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். அதில் பேசிய நடிகர் விஷ்ணு, விஷால் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை கொரோனா உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில் படமாக்கியதாக கூறினார். ஆனால் தற்போது அந்த திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பெருமிதம் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், திரைப்பட இயக்குநர்கள் தயாரிப்பு பணியில் Executive Producer-ஆக தங்களை இணைத்துக்கொண்டு ஒரு படத்தில் வேலை செய்யவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அவ்வாறு அவர்கள் பணியாற்றும்போது ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் அதிகரிக்காமல் இருக்கும். அதன் காரணமாக ஒரு படம் தோல்வியடையாமல் இருக்கும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் இந்த திரைப்படத்தை உருவாக்க தன்னுடைய தந்தையின் பணி ஓய்வு பணத்தை கொடுத்து உதவியதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா ஜான் ஆகியோர் நாயகிகளாக நடித்தனர். ஆனால் FIR திரைப்பட நிகழ்ச்சி மேடைகளில் மூன்று நடிகைகளையும் ஒன்றாக இணைக்க முடியவில்லை. இவர்கள் வளர்ந்து வரும் நடிகைகள் தான். இருந்தபோதும் அதை தன்னால் செய்ய முடியவில்லை, இந்த விவகாரத்தில் ஒரு தயாரிப்பாளராக தான் தோல்வி அடைந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி தற்போது 200 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.