சினிமா

"நான் தெலுங்கு தேசத்தின் மருமகன் ஆகப் போகிறேன்!'' - நடிகர் விஷ்ணு விஷால்

"நான் தெலுங்கு தேசத்தின் மருமகன் ஆகப் போகிறேன்!'' - நடிகர் விஷ்ணு விஷால்

webteam

"நான் தெலுங்கு தேசத்தின் மருமகன் ஆகப் போகிறேன்" என்று ஜுவாலா கட்டாவை திருமணம் செய்யப்போகும் தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டார் நடிகர் விஷ்ணு விஷால்.

நடிகர் விஷ்ணு விஷால் 4 வருடங்களாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியர் ரஜினி என்ற பெண்ணை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, இருவருக்கும் இடையே சில மாதங்களாக மன வருத்தம் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

பின்னர், இருவரும் சட்டப்படி விவாகாரத்து பெற்றுவிட்டதாக அறிவித்தனர். மேலும், தங்கள் மகனை இருவரும் நல்ல முறையில் வளர்ப்போம் எனவும் தெரிவித்தனர். "எங்கள் மகன் மற்றும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை தாருங்கள்" என்று விஷ்ணு விஷால் அப்போதே கேட்டுக்கொண்டிருந்தார்.

இதன்பின், பேட்மின்டன் வீராங்கனை ஜுவலா கட்டா உடன் இணைந்து பேசப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து இருவரும் ஜோடியாக, நெருக்கமாக இருக்கும் படங்களை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றி வந்தனர். இதற்கிடையே, சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று ஜுவலா உடன் இருக்கும் காதலை உறுதி செய்திருந்தார் விஷ்ணு. மேலும், இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டும் இருந்தனர். இதனால், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் எனப் பேசப்பட்டு வந்தது.

இந்தநிலையில்தான் 'காடன்' படத்தின் தெலுங்கு விழாவில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால், தனது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

அந்த விழாவில், ``நாங்கள் இருவரும் விரைவில் இணைய இருக்கிறோம். ஆம், நான் தெலுங்கு தேச அல்லுடு (தெலுங்கு தேசத்தின் மருமகன்) ஆகப் போகிறேன். இதை நினைத்து பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. நான் விரைவில் திருமண தேதி அறிவிக்கிறேன்" என்றார்.

'காடன்' படமானது மூன்று மொழிகளிலும் எடுக்கப்படுகிறது. இதன் தெலுங்கு பதிப்புக்கு விஷ்ணு விஷாலுக்கு உதவியது ஜுவலா கட்டாதான். விஷ்ணு விஷால் கூடவே இருந்து 'காடன்' படப்பிடிப்பு முழுவதும் ஜுவலா கட்டா பக்கபலமாக இருந்தார் என்று மேடையிலேயே விஷ்ணு வெளிப்படுத்தினார். இதற்காக "நான் ஜுவாலாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்றும் விஷ்ணு மேடையில் கூறினார்.