சினிமா

திருட்டு விசிடி தடுப்பு பிரிவுக்கு மிஷ்கின் தலைவர்: விஷால் தகவல்

திருட்டு விசிடி தடுப்பு பிரிவுக்கு மிஷ்கின் தலைவர்: விஷால் தகவல்

webteam

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திருட்டு விசிடி தடுப்புப் பிரிவுக்கு இயக்குனர் மிஷ்கின் தலைவராக இருப்பார் என்று நடிகர் விஷால் கூறினார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு குறித்து முடிவு செய்ய நேற்று சிறப்புக் கூட்டம் நடந்தது.

அப்போது, விஷால் பேசும்போது, ’எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம், ஒரு தனி மனிதனுக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. வரும் வியாழக்கிழமை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும். தயாரிப்பாளர்கள் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார். தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும். தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் திரைப்பட விருது நிகழ்ச்சியை நடத்த திட்டமிட உள்ளோம். அதே போல இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

துணைத் தலைவர்கள் பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பொது செயலாளர் ஞானவேல் ராஜா, பொதுச்செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.