jailer - varman web
சினிமா

‘அந்த மனசுதான் சார்...’ - ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி சொன்னது குறித்து நெகிழ்ந்து பேசிய விநாயகன்!

Rishan Vengai

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக வெளிவந்தது ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், விநாயகன், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரூபாய் 600 கோடிக்கு மேல் வசூல்செய்து, பாக்ஸ் ஆஃபிஸ் கலக்ஷனில் சாதனை படைத்தது.

jailer

ரஜினிகாந்த் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையாக வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விநாயகன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோருடைய கவனத்தையும் பெற்றார். படம் பார்த்த எல்லோருக்கும் முதல்பாதிக்கு பிறகு வேறொரு பெரிய வில்லன் வரப்போகிறார் வர்மன் கதாபாத்திரம் அவ்வளவுதான் என நினைத்தபோது, ’இல்லை பெரிய ஜெயிலரே வந்தாலும் நான்தான் வில்லன்’ என ரஜினிக்கு நேரதிராக தோரணையோடு நிற்கும் வர்மன் கேரக்டர் படத்தை மேலோக்கி எடுத்துச்சென்றது.

varman

திமிறு படத்தில் முக்கிய வில்லிக்கு துணைக்கதாபாத்திரமாக நடித்திருந்த ஒருவர், ரஜினி போன்ற ஒரு பெரிய மாஸ் ஹீரோவுக்கு எதிராக காட்டியிருந்த அசுரத்தனமான நடிப்பை எல்லோரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் விநாயகன் பேசியுள்ளார்.

வர்மன் இல்லனா இந்த ஜெயிலர் இல்ல..

சில்லி மாங்க்ஸ் மாலிவுட் யூ-டியூப் சேனல் உடனான இண்டர்வியூவில் ஜெயிலர் படம் குறித்து பேசியிருக்கும் விநாயகன், ஜெயிலர் படப்பிடிப்பின் போது ரனிகாந்த்திற்கு முன் நடிப்பதற்கு அதிகமாக பயந்ததாகவும், அப்போது ரஜினிதான் தன்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

ரஜினி குறித்து பேசியிருக்கும் விநாயகன், “ஜெயிலர் படத்தில் ரஜினி சாருக்கு முன்னாடி நடிக்கிறதுக்கு அவ்வளவு நடுக்கமா இருந்துச்சு. அவருக்கு நேரெதிராக அமர்ந்து பேசும் போது கால்கள், கண்ணமெல்லாம் நடுங்கிவிட்டன. அப்போது என்னை அழைத்து பேசிய ரஜினி சார், விநாயகன் ‘வர்மன் இல்லனா இந்த ஜெயிலர் இல்ல’ என்று கூறி என்னை அமைதிப்படுத்தி நடிக்கவைத்தார்” என்று நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினியும் இதே கருத்தை ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “ராமனுக்கு எல்லா புகழும் ராவணனால்தான் கிடைத்தது, அதுபோலதான் ஜெயிலர் படத்தில் வர்மனும். வர்மன் இல்லை என்றால் இந்த ஜெயிலரே இல்லை” என்று பாராட்டி பேசியிருந்தார்.