vinayagan file image
சினிமா

“பெண்ணை இழுத்துவந்ததாகக்கூட சொல்வார்கள்” கைதான வர்மன்.. இதுதான் காரணமா!!

யுவபுருஷ்

மலையாள சினிமாவில் கடந்த 28 ஆண்டுகளாக நடித்து வரும் விநாயகன், தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். திமிரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த அவர், ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதர்ச நடிகராக மாறினார்.

குறிப்பாக வர்மன் என்ற வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்த இவரது பல வீடியோக்கள் இன்றளவும் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.

இந்த நிலையில், ‘காவல்நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்டதால் விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்ற தகவல் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் தங்கியிருந்த குடியிருப்பில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு காவல்நிலையத்தில் விநாயகன் ஆஜரானதாக கூறப்படுகிறது.

நடிகர் விநாயகன்

அப்போது, மதுபோதையில் அவர் ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிபடுத்துவதற்காக அவர் மருத்துவ பரிசோதனைக்கும் அழைத்துச்செல்லப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விநாயகன், “இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. புகார் கொடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன். வந்த இடத்தில் என்னை கைது செய்திருக்கிறார்கள். நான் ஏற்கனவே சோர்வாக இருக்கிறேன். அவர்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நடிகர் விநாயகன் கைது

நான் ஒரு womanizer என்று கூட சொல்வார்கள். அவ்வளவு ஏன், இந்த இடத்திற்கு ஒரு பெண்ணை இழுத்துவந்தேன் என்று கூட சொல்வார்கள்” என்று கூறினார். போலீஸாரால் கைது செய்யப்பட்ட விநாயகன் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.