சினிமா

தைரியம் தந்த விக்ரம்வேதா, மீசைய முறுக்கு... நம்பிக்கையுடன் ரிலீசாகும் திரைப்படங்கள்!

தைரியம் தந்த விக்ரம்வேதா, மீசைய முறுக்கு... நம்பிக்கையுடன் ரிலீசாகும் திரைப்படங்கள்!

webteam

ஜி.எஸ்.டி, திரையரங்க கட்டண உயர்வு போன்றவற்றால் கடந்த சில வாரங்களாக அதிகளவிலான படங்கள் வெளியாகாமல் இருந்தன. இந்நிலையில், விக்ரம்வேதா, மீசைய முறுக்கு ஆகிய படங்களின் வெற்றி தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளதால், இந்தவாரம் மூன்று முக்கியமான படங்கள் வெளியாகின்றன.

தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி-2 திரைக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கஜோல் ரீ எண்ட்ரி, சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கும் முதல் திரைப்படம், உலகம் முழுக்க சுமார் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு என பல்வேறு சிறப்புகளோடு இப்படம் வெளிவருகிறது.

தங்கமீன்கள் படத்தைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகி, ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்த தரமணி இந்தவாரம் திரைக்கு வருகிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகான சமூக மாற்றங்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, வசந்த் நடித்துள்ளனர். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வரிகளும், யுவன்சங்கர் ராஜாவின் இசையும் 'தரமணி'க்கு கூடுதல் பலம்.

நகரப் பின்னணியிலான கதைக்களங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், முதல்முறையாக 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். அவரோடு, பார்த்திபனும் சூரியும் கூட்டணி அமைத்திருப்பதால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' படம் மூலம் தளபதி பிரபு இயக்குநராக அறிமுகமாகிறார்.

தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கழிப்பறைகளின் முக்கியத்துவத்தோடு உருவாகியுள்ள திரைப்படம் 'டாய்லெட் ஏக் ப்ரேம் கதா.’ அக்ஷய்குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படங்களுடன் பெரிதும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'எமோஜி’ படமும் ரிலீஸாகிறது.