சினிமா

“சங்கத் தமிழன் தோல்விக்கு நாங்கள்தான் காரணம்” - விக்கிரமராஜா

“சங்கத் தமிழன் தோல்விக்கு நாங்கள்தான் காரணம்” - விக்கிரமராஜா

webteam

விஜய் சேதுபதியின் 'சங்கத் தமிழன்' திரைப்படம் தோல்வியடைய நாங்களே காரணம் என தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவையின் நிறுவனர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள் விளம்பரங்களில் நடிக்கும்போது பணம் பார்த்து நடிக்காமல், பொருட்களின் தரம் பார்த்து நடிக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் நடிக்கும் படங்கள் தோல்வி அடையும் என்று கூறினார்.

மேலும், “நடிகர்கள் நட்சத்திரமாக மின்னுவதற்கு வணிகர்களும் ஒரு காரணமாக உள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் நடிப்பதற்கு தான் நாங்கள் எதிர்க்கிறோம். நடிகர்கள் பொருளின் தரம் பார்த்து நடிப்பதில்லை. பணம் பார்த்து நடிக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் விளம்பர படத்தில் நடித்ததற்காக எங்களிடம் இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. எங்களை சந்தித்து பேசுவதாக கூறி உள்ளார். ஆனால் இதுவரை பேசவில்லை. தமிழகத்தில் வணிகர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாங்கள் ஜிஎஸ்டியை முழுமையாக எதிர்க்கவில்லை. அதில் உள்ள சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என சொல்கிறோம்

அமேசான், பிலிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வணிகர்கள் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் ஜனவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் டெல்லியில் அகில இந்திய அளவில் வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அந்த மாநாட்டிற்குப் பின் எங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து தீர்க்கமான முடிவெடுத்து அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.