vijay on politics pt
சினிமா

நிர்வாகிகளுடன் ரகசிய சந்திப்பு.. தேர்தலுக்கு தயாராகுங்கள்.. கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

அரசியல் கட்சியாக மாறுகிறதா விஜய் மக்கள் இயக்கம்.. நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது விஜய் பேசியது என்ன? 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தலுக்கு குறியா? என்ன நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.

யுவபுருஷ்

மக்கள் இயக்க நிர்வாகிகள் உடனான சந்திப்புகள், மக்கள் நலப்பணிகள், தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது என்று அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு தேவையான அத்தனை காரியங்களையும் செய்து வருகிறார் நடிகர் விஜய். அதற்கு ஏற்றபடி, தங்களது ஆதர்ச நாயகன் எப்போது அரசியலுக்கு வருவார் என்று ரசிகர் படையும், மக்கள் இயக்க நிர்வாகிகளும் காத்திருக்கும் நேரத்தில், நிர்வாகிகளோடு திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார் விஜய். அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி கடந்த சில வருடங்களாகவே எழுந்து வந்தாலும், கடந்த 2 வருடங்களாக கேள்விக்கான முகாந்திரங்கள் அதிகரித்து வருகின்றன.

அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு பிறந்தநாள், நினைவு நாட்களில் மாலை போடுவதில் தொடங்கி, நடப்பு அரசியலில் முக்கிய தலைவர்களாக விளங்கும் கனிமொழி, அன்புமணி ராமதாஸ், சீமான், திருமாவளவன் உள்ளிட்டவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகளை கொடுத்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதிலும், காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என்று பெற்றோர்களிடம் வலியுறுத்துங்கள் என்று மாணவர்களிடம் கூறியிருந்தார் நடிகர் விஜய். இவை அனைத்தையும் தாண்டி, நேரடியாகவே மக்கள் பிரச்னைகளிலும் களம் காண தொடங்கியுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்களை நேரில் சென்று பல மணி நேரம் நின்று தானே கொடுத்ததெல்லாம் பேசுபொருளாகவும் கவனம் ஈர்க்கும் விதமாகவும் இருந்தது.

இன்று, நேற்று என்று இல்லாமல், 2009ல் இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பது தொடங்கி, அனிதா மரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என அவ்வப்போது மக்கள் பிரச்னைகளுக்கு நேரடியாக களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்து வருகிறார். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதில், இருந்து நடிகர் விஜயின் அரசியல் ஆர்வம் அதிகரித்து வருவதாக அவர் உடன் இருக்கும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான சூழலில்தான், நேற்று காலை சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் 150 மாவட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். காலை 8 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் 8:30 மணிக்கு பங்கேற்ற விஜய், சுமார் ஒன்றரை மணி நேரமாக நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேசும்போது, பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இயக்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்.

தலைமையையும் அடிமட்ட தொண்டரையும் இணைக்கும் வகையில் இயக்கத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அப்படி, மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால், உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்று விஜய் கூறியதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தையும் தாண்டி, வெகு விரைவில் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற இருப்பதாகவும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்களே இருக்கும் நிலையில், விஜய் இத்தகைய கருத்தை நிர்வாகிகள் மத்தியில் பேசியிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

2026 சட்டசபை தேர்தலுக்கு விஜய் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அதற்கு ஒரு முன்னோட்டமாக நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே அரசியல் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிவாரண முகாம்களை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கு விஜய் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாற்றிய பின், விஜய் மீண்டும் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே, அடுத்த மாதம் மாநிலம் தழுவிய அளவில் நிர்வாகிகளோடு விரிவான ஆலோசனைக் கூட்டம் நடப்பதாகவும், அதில் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு ஒரு பக்கம் இருக்க, வாரம் ஒரு நாள் முழுவதுமாக மக்கள் இயக்க பணிகளில் விஜய் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியோ, நடிகர் விஜயின் அரசியல் ஆர்வம்... அரசியல் கட்சி தொடங்கும் அளவிற்கு முன்னேறி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.