கொரோனா ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் எனவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தினம் 22ஆம் தேதி கொண்டாடப்படும் வகையில் சென்னையின் புராதான கட்டடங்கள், சென்னையின் அழகியல் பேசும் புகைப்படங்கள் கொண்ட சென்னை டூ மெட்ராஸ் புகைப்பட புத்தக வெளியீட்டு விழா, சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தி ஆர்ட் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, “சென்னையின் புகைப்படங்களை பார்கும்போது சென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா? என ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பொக்கிஷங்கள் நிறைய இருக்கும் இடம் சென்னை. அவற்றை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். புகைப்படம் என்பது ஒரு வீடியோ. அதை பார்க்கும்போது அந்த நினைவுக்கு கொண்டு செல்லும். அறிவுதான் கடவுள். அறிவின் பார்வை முக்கியமானது. ஊரடங்கால் சாதாரன மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மக்கள் மீண்டும் மீண்டு வரவேண்டும். எல்லோருடைய வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.