goat, Vijaya Prabhakaran pt web
சினிமா

The GOATல் விஜயகாந்த் | “நொடிக்கு நொடி அப்பாவை அப்படி ரசித்தேன்...” - விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி

“தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அண்ணனின் GOAT திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த எனது தந்தை கேப்டனை காட்சிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” விஜய பிரபாகரன் தேனியில் பேட்டி.

PT WEB

விஜய், வெங்கட்பிரபு இருவரும் குடும்பத்தில் ஒருவர்

நடிகர் விஜய்-ன் GOAT திரைப்படத்தை தேனி வெற்றி திரையரங்கில் நடிகர் சரத்குமார், இயக்குநர் பொன்ராம் மற்றும் விஜயகாந்த்-ன் மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முகம் பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு பார்த்தனர்.

படத்தின் இடைவெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய பிரபாகரன், "மறைந்த எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பம் மூலம், விஜய்யின் The GOAT திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெங்கட்பிரபு எனது தந்தையின் காட்சியை நன்றாக இயக்கியிருக்கிறார். விஜய் அண்ணனின் நடிப்பு, யுவனின் இசை நன்றாக இருக்கிறது. விஜய் அண்ணன், வெங்கட் பிரபு அண்ணன் இருவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர்களே. செந்தூரப்பாண்டி, நெறஞ்ச மனசு என அந்த உறவு தொடர்கிறது. அதனடிப்படையில்தான் The GOAT திரைப்படத்தை விஜயகாந்த்-திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எடுத்திருப்பதாக தெரிவித்திருந்தனர்” என தெரிவித்திருந்தார்.

The GOAT எங்கள் குடும்பத் திரைப்படம்

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், “அப்பாவின் உருவத்தை பயன்படுத்தி விஜய் அண்ணன் தோன்றுவது போன்ற காட்சி ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதெல்லாம் அவரவர்களின் தனிப்பட்ட கருத்து. எங்களுக்கு அப்பாவின் காட்சி நன்றாக வந்திருக்கிறது.‌

கோட்

செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் இருந்து விஜய் அண்ணன் அவர்கள் உடனான அப்பாவின் பாசமும் பந்தமும் தொடர்கிறது. அதேபோல் அப்பாவை வைத்து 41 படங்கள் இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களுடனான பயணமும் தொடர்கிறது. எனவே The GOAT திரைப்படத்தை, ஒரு குடும்ப படமாகத்தான் பார்க்கிறேன். திரையில் அப்பா உருவத்தை பயன்படுத்தி விஜய் அண்ணன் தோன்றுவது போல காட்சி அமைத்திருப்பதால், அப்பா இடத்தை விஜய் அண்ணன் நிரப்புவது என்பதெல்லாம் கிடையாது. இது சினிமா.

மட்டுமன்றி, இதுபோன்றொரு தொழில்நுட்பத்தில் விஜய் அண்ணன் படத்தில் இப்படியொரு காட்சியில் அப்பாவை பதிவுசெய்கின்றனர் என்பதை அப்பா உயிருடன் இருக்கும்போது படக்குழு செய்திருந்தாலும், அப்பா அதற்கு சம்மதித்திருப்பார். அந்த அளவுக்கு அப்பாவுக்கு விஜய் அண்ணனுக்கு அன்பான உறவு உள்ளது. எனவே சினிமாவாக இதை பார்த்தலே சரி. இதில் நடந்துள்ளது, கேப்டனுக்கான Tribute மட்டுமே”

தவெக மாநாடு மற்றும் விசிக அழைப்பு குறித்து..

“தவெக கட்சியின் மாநாடு நடத்துவதில் பல பிரச்னைகள் நிலவுகின்றன. புதிதாக தொடங்கப்பட்ட தவெக கட்சியின் மாநாட்டில் தேமுதிக பங்கேற்பது என்பது முக்கியம் இல்லை.‌ மேலும் தவெக உடன் தேமுதிக கூட்டணியிலும் இல்லை.‌

தவெக மாநாடு நடத்துவது தொடர்பான வேலைகளை அக்கட்சியினர் செய்து வருகின்றனர். நாங்கள் எங்கள் வேலைகளை செய்து வருகிறோம். தவெக உடன் தேமுதிக கூட்டணியில் இல்லாததால் அவர்கள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்பது முக்கியம் இல்லை.

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்தால் பங்கேற்பது குறித்து தேமுதிக தலைமை முடிவெடுக்கும்” எனத் தெரிவித்தார்.

“நொடிக்கு நொடி அப்பாவை பார்த்து ரசித்தேன்”

மேலும் பேசிய அவர், “கண், முடி, மூக்கு, முகம் என அப்பா திரையில் தோன்றும் காட்சியை நொடிக்கு நொடி இமைக்காமல் பார்த்து ரசித்தேன். அதுவும் எங்கள் கட்சியினர் மற்றும் விஜய் அண்ணனின் ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் எனது தந்தையை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.