விஜயகாந்த், லப்பர் பந்து pt web
சினிமா

"கேப்டனுக்கான உண்மையான tribute.."- ’லப்பர் பந்து’ பார்த்துவிட்டு பிரேமலதா, விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி

Angeshwar G

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி (செப் 20)வெளியான திரைப்படம் லப்பர் பந்து. மேலும், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பாலசரவணன், ஜென்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒட்டுமொத்த படத்தையும் தங்களுடைய வாழ்க்கையாக கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிக் கிடக்கின்றனர் படக்குழுவினர்.

‘லப்பர் பந்து’ படம்

கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை சார்ந்து உருவாகியிருக்கும் இப்படத்தை பார்த்த இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், நடிகர் சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டியிருந்தனர்.

அனைவருக்குமான கொண்டாட்டம்

படத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பொன் மனச்செல்வன்’ திரைப்படத்தில் இருந்து ‘நீ பொட்டுவச்ச தங்கக்குடம்’ பாடல் தினேஷ் கதாப்பாத்திரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பாடல் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக pt prime யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த இயக்குநர், “விஜயகாந்தை கொண்டாட வேண்டும் என நினைத்தேன். எனவே, பயன்படுத்தினேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு படக்குழு சார்பில் திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. திரைப்படம் பார்த்தபின், நிர்வாகிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதில், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “லப்பர் பந்து திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்தோம். எல்லோருக்கும் திரைப்படத்தைப் பார்த்ததில் சந்தோஷம். ஒவ்வொரு சீனிலும் கேப்டனின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. சுவர் விளம்பரத்தில், பாடலில், இரு சக்கர வாகனத்தில் கேப்டனின் படம் இருந்தது போன்றவற்றை சொல்லலாம். இந்த படம் அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக உள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இந்த படத்தை மிகச்சிறப்பாக இயக்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், கதாநாயகர்களுக்கும் இசையமைப்பாளருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்தார்.

கேப்டனுக்கான tribute

திரைப்படம் தொடர்பாக பேசிய விஜய பிரபாகரன், “லப்பர் பந்து திரைப்படத்தை உன்மையாகவே மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்கள். உண்மையாகவே கேப்டனுக்கான ட்ரிப்யூட்டாக இந்த படம் உள்ளது. அப்பா வரும் காட்சிகளில் எல்லாம், எங்கள் கட்சிக்காரர்கள் உட்பட எங்களுக்கு செண்டிமெண்டல் டச் உள்ளது. ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடலுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த The Goat திரைப்படத்திலும் விஜயகாந்த் உருவத்தில் விஜய் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றது. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.