சினிமா

"விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு ரெடியா?" - ‘வாரிசு’ ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

"விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு ரெடியா?" - ‘வாரிசு’ ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

சங்கீதா

நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் படங்களுக்கு எதிர்பார்ப்பு எந்தளவுக்கு இருக்கிறதோ அதைவிட, அவரது ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடிகர் விஜய் அரசியல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும், அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தடைகளை சந்தித்து வருகின்றார். இதனை வெளிப்படுத்தும்விதமாக தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், குட்டி கதை ஒன்றை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்தக் குட்டி கதையின் மூலம் தனது நிலைப்பாட்டை ரசிகர்களுக்கு தெரியவைப்பார் நடிகர் விஜய். இதனால் விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே எப்போதும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பிறகு இந்தாண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு பல்வேறு காரணங்களால் ஆடியோ வெளியிட்டு விழா வைக்காதது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில், கொரோனா முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ ஆடியோ விழா மிகப் பிரம்மாண்டமாக வரும் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘வாரிசு’ படத்தின் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு ரெடியா என்று சின்ன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன குட்டி ஸ்டோரி விஜய் சொல்லப்போகிறார் என்பதை ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துள்ளனர்.

விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்றப் பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது.