நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ மற்றும் ‘தளபதி 67’ படங்களின் அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்தப்படம் நடிகர் விஜயின் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று குடும்ப பின்னணிப் படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பூ, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சென்னை, ஹைதராபாத் என இந்தப் படத்தின் படப்பிடிப்பு மாறி மாறி நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் வருகிற 27-ம் தேதியுடன் ‘வாரிசு’ படத்தை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளும் நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்கம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள், வருகிற 23-ம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.