சினிமா

"அதே டெய்லர், அதே வாடகை" - 'அனபெல் சேதுபதி' திரை விமர்சனம்

subramani

விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு, சுப்பு பஞ்சு, ஜாங்கிரி மதுமிதா, தேவதர்ஷினி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட நடிகர் பட்டாளத்தோடு டிஸ்னி ஹாட் ஸ்டாரில் களமிறங்கி இருக்கிறது அனபெல் சேதுபதி. பழம்பெரும் இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் பெரிய ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.

வீர சேதுபதியாக வரும் விஜய் சேதுபதி தன் வருங்கால மனைவி டாப்ஸிக்கு ஒரு அரண்மனை கட்டுகிறார். பயனற்ற இடம் என விற்கப்பட்ட ஒரு மலைப் பகுதியில் தான் அந்த அரண்மனை கட்டப்படுகிறது. அரண்மனையின் பொழிவில் ஆசைகொண்ட ஜமீந்தாரர் ஜகபதி பாபு விஜய் சேதுபதியிடமிருந்து அந்த அரண்மனையை கைப்பற்ற குறுக்குவழியை கையாள்கிறார். 1940 களில் நடக்கும் இச்சம்பவத்தில் பெரிய உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. பிறகு ஜகபதி பாபுவின் குடும்பபே அந்த அரண்மனையில் ஆவியாக அலைகிறது. ஆவிகளை மீட்க பல வருடங்களுக்குப் பிறகு டாப்ஸி வருகிறார். இப்படியாக ஒழுங்கற்று நீள்கிறது திரைக்கதை. இது ஒரு நகைச்சுவைப் படமாகவும் முழுமை பெறவில்லை. பேய்ப் படமாகவும் நிறைவைத் தரவில்லை. மாறாக ரசிகர்களுக்கு பெரிய சோர்வைத் தருகிறது.

இத்தனை பெரிய பொருட்செலவில் அரண்மனை செட் போட்ட படக்குழு கொஞ்சம் கிராபிக்ஸ் காட்சிகளையாவது மெனக்கெட்டு உருவாக்கி இருக்கலாம். கத்தி பறப்பது பாத்திரங்கள் விழுவது போன்ற அரத பழசான சில காட்சிகளையே வைத்திருக்கிறார்கள். இந்த கிராபிக்ஸை எல்லாம் இப்போது யூ-டியூபர்களே செய்கிறார்கள். 1940 களிலும் சரி 2021 லும் சரி விஜய் சேதுபதி ஒரே விதமான உடல் மொழியினை வெளிப்படுத்தி இருக்கிறார். ராதிகா போன்ற மிகப் பெரிய நடிகைகளின் கால் சீட் மொத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது.

யோகி பாபுவின் காமெடி எப்போதும் சுமார்தான் இத்திரைப்படத்தில் இன்னுமே சுமார். யோகிபாபு எமோஷனலாக ஸ்கோர் செய்ய வேண்டிய இடங்கள் நிறையவே இருந்தாலும் அதனை அவர் தவற விட்டிருக்கிறார். அழுத்தமான ப்ளாஷ் பேக் காட்சியின் முடிவில் ரசிகர்களை கொஞ்சம் திரைக்கதைக்குள் கொண்டு செல்லும் வாய்ப்பிருந்தும் அந்த இடத்தில் சுமாரான ஒரு காமெடி செய்து கதையின் அடர்த்தியை வலிந்து காலி செய்திருக்கிறார்கள்.

திகில் படங்களைப் பொறுத்தவரை இரவுக் காட்சிகள் முக்கியமானது. இரவுகளைக் கொண்டு திகில் படங்கள் நன்றாகவே ஸ்கோர் செய்யலாம். ஆனால் இத்திரைப்படத்தில் அப்படியொன்று இல்லவே இல்லை. ஆவியாக வரும் நடிகர் கூட்டம் ஏதோ பிக்பாஸ் செட்டுக்குள் பெர்பாமன்ஸ் செய்வது போல செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். லாஜிக் மீறல்கள் இருந்தால் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் இத்திரைப்படத்தில் லாஜிக் என்ற ஒன்று இல்லவே இல்லை. கௌதம் ஜார்ஜின் ஒளிப்பதிவு அருமை. கிருஷ்ணா கிஷோரின் இசை கொஞ்சம் ஓகே. கலை வேலைகள் சூப்பர். மற்ற படி அனபெல் சேதுபதியில் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தீபக் சுந்தர்ராஜன்.