நடிகை ஜோதிகா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தேனா என்பது தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா, தஞ்சை பெரிய கோயில் பற்றியும் தஞ்சையில் உள்ள மருத்துவமனைகள் நிலை பற்றியும் பேசினார். இந்த கருத்துக்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்புகளும், ஆதரவுகளும் எழுந்தன.
இதைத்தொடர்ந்து ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக கூறி நேற்று முதல் ஒரு போலியான ட்வீட் உலா வருகிறது. அதில்
"ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது" என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த ட்வீட் போட்டோவை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இது போலியானது என தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என செய்திகள் பரவியது. அப்போது "போய் வேலை இருந்தா பாருங்கடா" என ட்வீட் செய்து பதிலடி கொடுத்தார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.