சினிமா

2 வங்கப் புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி

2 வங்கப் புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி

webteam

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்து எடுத்துள்ளார். 

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2500 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை பாலுட்டிகள் பறவைகள் மற்றும் ஊர்வன வகை வன விலங்குகள் ஆகும். 2010ஆம் ஆண்டு முதல் இப்பூங்காவில் உள்ள விலங்குகளை மக்கள் தத்தெடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இந்த முயற்சியில் பங்கு பெற்று பல வனஉயிரினங்களை தடுத்துள்ளனர்.

அதேபோல் உலக வன உயிரின நாளான இன்று நடிகர் விஜய் சேதுபதி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்தார். அத்துடன் ஆதித்யா மற்றும் ஆர்த்தி என்னும் இரண்டு வங்காள புலிகளை அவர் தத்து எடுத்தார். அதன்படி, புலிகளின் பராமரிப்பு மற்றும் உணவுக்கான ஆறு மாதச் செலவுத்தொகையான ரூ.5 லட்சத்தை காசோலையாக பூங்கா இயக்குநர் யோகேஷ் சிங்கிடம் விஜய் சேதுபதி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, நண்பர் ஒருவர் கூறியதின் அடிப்படையிலேயே இரண்டு வங்கப்புலிகளை 6 மாதம் தத்தெடுத்ததாகவும், இதே போல் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து தத்தெடுக்கவும் அறிவுறுத்தினார். இதனால் ஒரு விழிப்புணர்வும், பலர் விலங்குகளை தத்தெடுக்க  முன்வருவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னைக்கு அருகிலேயே உள்ள இப்பூங்காவிற்கு சென்றால், காட்டுக்குள் செல்லும் அனுபவம் கிடைக்கிறது என கூறினார். அனைவரும் பீச், ஷாப்பிங் மால் செல்வதை விட பூங்காவிற்கும் வரலாம் என்றார்.