‘தளபதி64’ படத்திற்கான மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடந்து வருகிறது. இதுவரை இரு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் நடிகர் சாந்தனுவும் கலந்து கொண்டார். அதற்கான படம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகியது.
அதனை அடுத்து மூன்றாம் கட்டமாக கர்நாடக மாநிலம் ஹிமோகாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது. அங்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளன. விஜய் மட்டும் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளார்.
ஆனால் இன்னும் விஜய் சேதுபதி இணையவில்லை. விஜய் பங்கேற்ற சில புகப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இன்னும் இரு தினங்களில் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் சிறைக்காட்சி சார்ந்தவை படமாக்கப்பட உள்ளன. அதற்கான செட் போடப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான சண்டைக் காட்சியை எடுக்க இயக்குநர் கோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தில், மிக முக்கியமான பாத்திரத்தில் மாளவிகா மோகன் நடித்து வருகிறார். இவரும் விஜயும் பங்கேற்கும் காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டு உள்ளன. இந்தப் படத்தில் கல்வி முறைக்கும் அதில் நடக்கும் ஊழலுக்கும் எதிரான காதாபாத்திரத்தில் விஜய் நடித்து வருவதாக தெரிகிறது. இதில் அவருக்கு கல்லூரி பேராசிரியர் பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதில், ஆண்டனி வர்கீஸ், சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், ஸ்ரீநாத் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ இதனை தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.