சினிமா

‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி 

‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி 

webteam

விவசாயிகள் நலனுக்காக படப்பிடிப்புக்காக கட்டிய விவசாயிகள் கட்டடத்தை நடிகர் விஜய்சேதுபதி விட்டுக் கொடுக்க சொல்லி இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லாபம்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.  இதன் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்சேதுபதி புரொடக்சனும், 7சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும்  இணைந்து  ‘லாபம்’ படத்தை தயாரித்து வருகின்றன. 

இப்படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிகிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனி எனப் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதையம்சம் குறித்து சில தகவல்களை இயக்குநர் ஜனநாதன் தெரிவித்துள்ளார்.

அதில், “என் படத்தின் டைட்டில் ‘லாபம்’ என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இந்தப்படம் யாருக்கு லாபம்? என்பதையும் எது லாபம்?  என்பதையும் நிச்சயம் பேசும். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ்காரர்கள் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத் தான் பிரிட்டிஷ்காரர் இங்கே 300 வருடம் டேரா போட்டார்கள். 

விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன். இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை படம் விரிவாகப் பேசும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு விவசாயிகள் கட்டடத்தை செட்டு போட்டு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. ஆனால் அந்த செட்டு போடும் செலவுக்கு பதிலாக நிஜமாகவே ஒரு விவசாயிகள் கட்டடத்தை கட்ட வேண்டுகோள் வைத்துள்ளார் விஜய்சேதுபதி. அதில் படப்பிடிப்பு முடிந்த பிறகு அதனை விவசாயிகளிடமே இலவசமாக ஒப்படைத்து விடும்படியும் அவர் கூறியிருக்கிறார். இந்தத் தகவல் தற்போது வெளியாகி பேசுப் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.