விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
தமிழின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமானது, கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம்தான். முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதையால் கவனம் ஈர்த்த அவர், ‘கைதி’, ‘மாஸ்டர்’படத்தைத் தொடந்து தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார்.
’மாநகரம்’ படத்தில் சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா, சார்லி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழில் வெற்றி பெற்றதால் இப்படத்தின் இந்தி ரீமேக் ’மும்பைக்கர்’ படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி, முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முனீஸ்காந்த் ’மாநகரம்’ படத்தில் குழந்தையை கடத்தும் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைக் குவித்தார். சமீபத்தில் அந்த கெட்டப்பில் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மும்பைக்கர்’ புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். விஜய் சேதுபதி நடிக்கும் முதல் பாலிவுட் படம் ‘மும்பைக்கர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் விக்ராந்த் மாஸேவின் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ’மாநகரம்’ படத்தின் போஸ்டரைப் போலவே இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வடிவமைத்துள்ளார்கள்.