மூச்சுத் திணறல் ஏற்பட்ட தனது தம்பி உட்பட பலருக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் தவிப்பதாக விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டி முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், ”முதல்வர் அவர்களுக்கு தற்போது மதுரை GH இல் இருக்கிறேன் ஐயா இங்கு சுமார் 30 க்கு மேற்பட்டோர்கள் bed இல்லாமல் இருக்கிறோம் உதவி பண்ணுங்கள் ஐயா” என்று கோரிக்கை வைத்திருந்தார்”.
இதுதொடர்பாக இயக்குநர் விருமாண்டியிடமே தொடர்புகொண்டு பேசினோம், “எனது தம்பி ஒரு வாரத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் மூச்சுத்திணறலால் அவதியுற்றார். கொரோனா பரிசோதனை செய்ததில் நேற்று நெகட்டிவ் என்று வந்தது. ஆனாலும், இன்று தம்பிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்றோம். தம்பி உட்பட 30 க்கும் மேற்பட்டோருக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை. இதனால்தான், தமிழக முதல்வருக்கு ட்விட்டரில் கோரிக்கை வைத்தேன். உடனடியாக 30 மேற்பட்டோருக்கும் படுக்கை வசதி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார் நன்றியுடன்.
இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானிஸ்ரீ ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் க/பெ ரணசிங்கம். வெளிநாடுகளில் தமிழர்கள் படும் துய’ரணங்களை’ வெளிச்சம் போட்டுக் காட்டி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தாலும், ஜீ ப்ளஸ் என்ற ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. தயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் விருமாண்டிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக கார் பரிசளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.