சினிமா

“அதே மும்பை.. அதே டான்.. அதே கதை.. ஹீரோ மட்டும் வேற.’ - ‘மைக்கேல்’ திரைப்பார்வை

“அதே மும்பை.. அதே டான்.. அதே கதை.. ஹீரோ மட்டும் வேற.’ - ‘மைக்கேல்’ திரைப்பார்வை

PT

பாம்பேக்கு கிளம்பிய சிறாருக்கு இந்திய சினிமாவில் இதற்கு முன்னர் என்னவெல்லாம் நடந்ததோ அதெல்லாம் மைக்கேலுக்கும் நடப்பதே ‘மைக்கேல்’ படத்தின் ஒன்லைன்.

ஒருவரைக் கட்டிவைத்து ஊரே அடிக்கிறது. அடித்து முடித்ததும், இப்ப சொல்லு அவன் எங்க இருக்கான்னு என கேள்வி கேட்ட மறுகணம், 'ஆ... தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே' பேக்கிரவுண்டில் ஒருவர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். சிறுவன் ஒருவன் பாம்பேவுக்குள் காலடி எடுத்து வைக்கிறான். அங்கே ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்க சோட்டா பையன் கட்டையால் அடிப்பான் என்பதாக நீதி வாங்கித் தருகிறான். நாம் 'சலாம் ராக்கி பாய்' என சீட்டை விட்டு எழுந்தால், இது 'மைக்கேல் பாய் சார்' என அடுத்த அடி விழுகிறது. வேலு நாயக்கர் முதல் ராக்கி பாய் வரை பல டான்களுக்கு மத்தியில் கௌதம் மேனனும், டானாக மும்பைக்குள் உலவி வருகிறார்.

‘பீமா’ பட பிரகாஷ்ராஜுக்குக் கிடைத்த விக்ரமாய், கௌதம் மேனன் அணியில் டவுசர் பாயாக சேர்கிறார் மைக்கேல். காலச் சக்கரம் சுழல, குட்டி மைக்கேல் பெரிய மைக்கேலாக உருமாறுகிறார். தக்க சமயத்தில் கௌதம் மேனனைக் காப்பாற்றுகிறார். பிறகென்ன 'வெந்து தணிந்தது காடு' மொட்டை தாதாவைக் காப்பாற்றிய சிம்புவுக்கு அமைந்தது போல மைக்கேலுக்கும் நல்லதொரு வாழ்க்கை வாய்க்கிறது. ஆனாலும் கெட்ட கனவுகள் அவரை தூக்கம் இழக்கச் செய்கின்றன.

இதற்கிடையே ஒரு புது அசைன்மென்ட்டுக்காக மைக்கேலை டெல்லிக்கு அனுப்புகிறார் கௌதம். பெண்ணைப் பார்த்தால் காதலில் விழுவாய் பின்பு காலில் விழுவாய் என கௌதம் ஔவைப்பாட்டி போல் அடுக்குமொழியில் அட்வைஸ் பொழிந்தும் டெல்லியில் இறங்கிய மறுகணம் தொபுக்கடீர் என காதலில் விழுகிறார் மைக்கேல். 'Dont love me , i will break your heart' என அந்தப் பெண்ணும் ரெட் சிக்னல் காட்டுகிறார். ஆனாலும் மைக்கேல் அடங்கிப் போவதாய் தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்காக எதையும் செய்வான் மைக்கேல் என்பது உறுதியாக அடுத்தடுத்த ட்விஸ்ட் ஈட்டியாய் நெஞ்சுக்குள் இறங்குகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது மைக்கேலின் மீதிக்கதை.

மைக்கேலாக சந்தீப் கிஷன். 'அவன் குறுக்க மட்டும் போய் நின்னுடாதீங்க சார்' என்கிற ரீதியில் வாய்ஸ் ஓவர் வந்தாலும் சந்தீப்பைப் பார்த்தால் சற்று பாவமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் தன்னால் முடிந்தமட்டில் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார். கௌதம் சிறப்பாய் நடித்திருக்கிறார் என்பதை நமக்கு உறுதி செய்யவே கௌதம் மனைவியாகவும், மகனாகவும் அண்டை மாநில ஆட்களைப் போட்டிருக்கிறார்கள். ' மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் வெளக்கெண்ணெய் இதுல இவன் செத்தா எனக்கென்ன ' என்கிற ரீதியில் எக்ஸ்டிரா லக்கேஜாக இருக்கிறது விஜய் சேதுபதி- வரலட்சுமி வரும் காட்சிகள். ஏன் இவ்வளவு இழுவை என நாம் மொபைல் பேட்டரி தீரும் வரை மொபைலைப் பார்த்த பிறகு, ஒரு வழியாய் முடிகிறது இந்த மைக்கேல்.

படத்தின் பெரும்பலம் அதன் டெக்னிக்கல் டீம். கிரணின் ஒளிப்பதிவு, 90களின் பாம்பேவை காட்ட முயலும் காந்தியின் கலை இயக்கம், நம்‌ ஆடையிலும் ரத்தக்கறையை படிய வைக்கும் தினேஷ் காசியின் ஸ்டன்ட், கலர் டோன் என கடும் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். படத்தின் நிஜ ஹீரோ சாம் CS தான். பின்னணி இசை மிரட்டல். 'பறவைக்கு கூண்டு என்னிக்குமே சிறை தான்' , 'மன்னிக்க நான் தெய்வம் இல்ல மனுஷன்' என பல ராஜனின் வசனங்கள் அருமை.

இத்தனை இருந்தும் படத்தை மொத்தமாய் கீழிறக்குவது புளித்துப்போன ' எங்கூட்டு சின்ன பையனும் மும்பை போய் டான் ஆனார் சார்' கதை தான். சரி கதை தான் பழையது, திரைக்கதையாவது சுவாரஸ்யமாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை. 'அவன் மெதுவாத்தான் வருவான் ' என்பதாகவே ரேஸ் டிராக்கில் ஜேசிபி ஓட்டிக் கொண்டிருக்கிறது திரைக்கதை. இது போதாதென்று பறந்து பறந்து காதலித்து பயமுறுத்தவேறு செய்கிறார்கள். ‘கே.ஜி.எஃப்’ என நினைத்து ‘மிஸ்டர் பாரத்தில்’ நாம் சிக்கிக்கொண்டது தான் மிச்சம்.

அடுத்த பாகத்துக்கான லீடுடன் முடிகிறது இந்த மைக்கேல். அந்தப்பாகமாவது சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.