பொன்ராம் இயக்கயத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவந்துள்ளது.
சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீம ராஜா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பொன்ராம். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எம்ஜிஆர் மகன்’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இது வெளியாக உள்ளது. இதனை அடுத்து இவர், விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மூழ்கி உள்ளார். அதற்கான படப்பிடிப்பு எந்த நேரத்திலும் தொடங்கும் நிலையில் உள்ளது.
தற்சமயம் விஜய்சேதுபதி பிசியாக இருப்பதால் இவர் தனது முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதத்திற்குள் படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உறுதி செய்யப்பட்டு விடுவார்கள் எனத் தெரிகிறது. அதன் பிறகு வரும் மே மாதம் படத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், படவேலைகள் குறித்து இயக்குநர் பொன்ராம், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில ஊடகத்திற்கு பேசியுள்ளார். அதில், “திரைக்கதை முழுவதையும் முடித்துவிட்ட பிறகு, செகன்ட் ஆப் திரைக்கதையில் மட்டும் சில திருத்தங்கள் இருந்தன. கார்த்திக் சுப்புராஜ் கம்பெனி இதனுடன் இணைந்துள்ளது. இத்துடன் இப்போது ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். திண்டுக்கல்லை களமாக கொண்டு உருவாகும் இப்படம், கிராமத்து கதையை பின்புலமாக கொண்டிருக்கும். பொழுதுபோக்கு மற்றும் காமெடி படமாகவும் கூடவே ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த படமாகவும் இருக்கும். ஆனால் வழக்கமான படமாக இல்லாமல் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும். இந்தக் கதையை விஜய்சேதுபதியை மனதில் வைத்தே எழுதி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் ‘சன் பிக்ச்சர்’ நிறுவனத்தைதான் மறைமுகமாக பெரிய தயாரிப்பு நிறுவனம் எனக் கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.