சினிமா

40 நாள் ஷூட்டிங்: தாய்லாந்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி!

40 நாள் ஷூட்டிங்: தாய்லாந்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி!

webteam

தனது புதிய படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய்சேதுபதி தாய்லாந்து சென்றுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த, ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர்  இயக்கும் அடுத்தப் படத்திலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, தமிழில் ’பாகுபலி 2’ படத்தை ரிலீஸ் செய்த கே.புரொடக்‌ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன் சங்கர் ராஜா, இர்பான் மாலிக் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இதே டீம், ஏற்கனவே ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்திருந்தது. 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். ஒளிப்பதிவு, விஜய் கார்த்திக். இசை, யுவன் சங்கர்ராஜா. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது. சுமார் 40 நாட்கள் தொடர்ந்து தாய்லாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட உள்ளது.

‘இதற்காக விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று தாய்லாந்து புறப்பட்டு சென்றனர். இந்தக் கதைக்கு வெளிநாட்டு லொகேஷன் தேவை என்பதால் தாய்லாந்தில் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அவரும் இளையராஜாவும் இசை அமைக்க இருக்கின்றனர். டிசம்பரில் இதன் படப்பிடிப்புத் தொடங்குகிறது.