விடுதலை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படக்குழுவினர் சார்பில் ‘நன்றி நவிழும் நிகழ்வு’ சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி மற்றும் நடிகை பவானி ஸ்ரீ, தயாரிப்பாளர் எல்ரட் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், படத்தில் பணியாற்றும்போது இயக்குநர் வெற்றிமாறனுடன் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் சூரியுடனான தன் நட்பு என பல விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாக பேசினார்.
அதன் சிறு தொகுப்பு இங்கே..
“விடுதலை படம் ரிலீஸ் அன்னைக்கு காலையில வெற்றி சார் எனக்கு ஃபோன் பண்ணி, ‘சேது, எல்லா டார்ச்சரையும் பொறுத்துகிட்டு நடிச்சதுக்கு ரொம்ப நன்றி. படம் எல்லாருக்கும் பிடிச்சிருக்குனு செய்தி வந்துகிட்டே இருக்கு’ன்னு சொன்னார். இப்படி ஒரு ஃபோன்கால், கடைசியா எப்போ வந்துச்சுனு எனக்கு நினைவில்லை. இந்தப் படத்தோட எல்லா பகுதியிலுமே வெற்றி சார் தான் நிறைஞ்சிருக்கார்.
‘எந்தப் படத்தை வேண்டுமானாலும் ஒருவர் எடுக்கலாம், எந்தக் கருத்தை வேண்டுமானாலும் மக்களுக்கு சொல்லலாம். ஆனால், பணம் போடுகிறவர்களுக்கு, அந்தப் பணம் திருப்பி கிடைக்கணும்’ என்ற மிகப்பெரிய பொறுப்போடுதான் வெற்றி செயல்படுவார்.விடுதலை வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
பொதுவாவே ஒரு இயக்குநரோட எனர்ஜிதான் எனக்கு ரிஃப்ளெக்ட் ஆகும். வாத்தியார் - சுனில் மேனன் கதாபாத்திரங்களுக்கு இடையேயான காட்சிகளை படமாக்கும்போது, வெற்றி ரொம்ப பரபரப்பா இருந்தார். அந்த பரபரப்பு, எனக்கும் அப்படியே வந்துடுச்சு. அதனாலயே முதல்ல என்னால அந்த காட்சியை சரியா நடிச்சு கொடுக்க முடியலை. இதை அவர்கிட்டயே ‘சார் நீங்க ரொம்ப பரபரப்பா இருக்கீங்க, எனக்கும் அதுவே வருது’னு சொன்னேன்.
அவர் அதுக்கப்பிறகு கொஞ்சம் நிதானமா அந்த சூழலை ஹேண்டில் பண்ணார். அதனுடைய வெளிப்பாடுதான் அந்தக்காட்சி. அதேமாதிரிதான் போலீஸ் ஸ்டேஷன் காட்சியும். அந்த காட்சி எப்படி வர வேண்டும் என்பதை எனக்கு உணர்த்த, அதை வெற்றி சார் எனக்கு முதல்ல நடிச்சு காண்பிச்சார். அப்போ அவரோட அந்த வெளிப்பாடை பார்த்து நான் பயந்துட்டேன். அதை அப்படியே என்னால கொண்டு வரமுடியல. இருந்தாலும், என் அளவுல என்னுடையதை நடித்துகொடுத்தேன்.
விடுதலை படத்தின் பெருவெடிப்பு, வெற்றிமாறனின் சிந்தனையிலிருந்து தொடங்கியதுதான்.- விடுதலை வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
முதன்முதல்ல ஷூட் போனப்போ வெற்றி சார் எங்கிட்ட சொன்னது, ‘நான் நல்ல டைரக்டரானு தெரில, ஆனா நல்ல டெய்லர்… நல்லா தச்சு கொடுத்திடுவேன்’ (காட்சிகளை சரியா படத்தொகுப்பு செய்து கொடுப்பது) என்பதுதான். யானைகள் பணிவா இருக்கும்போது எப்படி அழகா இருக்குமோ, அப்படித்தான் வெற்றி சாரின் நடவடிக்கைகள் எனக்கு பிரம்மாண்டமா இருந்துச்சு.
நல்லவேளை நான் பெண்ணா இல்ல… இல்லன்னா வெற்றிமாறனை காதலிச்சிருப்பேன்!விடுதலை வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
என் சிந்தனை நிலை தடுமாறினாலும், வெற்றிமாறன் மீது எனக்கிருக்கும் மரியாதை நிலை தடுமாறாதுவிடுதலை வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
பொதுவாவே ஷூட்டிங்கில், லொகேஷனில் சில கஷ்டங்கள் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படி இருந்திருக்கு.
உதாரணத்துக்கு, ‘ஷூட்டிங் முடியும் முன்னாடி நம்மள நிச்சயம் பாம்பு கடிச்சிடும்’னு நினைச்சு நான் பல தடவை பயந்திருக்கேன். அதை வெற்றிகிட்டயே சொல்லிருக்கேனும்கூட! எப்படியோ தப்பிச்சிட்டேன். ஆனா இன்னொரு விஷயம் என்னன்னா, ஷூட்டிங் லொகேஷன் என்பது உண்மையில் ஒரு பிரச்னையே இல்ல. ஏன்னா, அது அந்தப் படம் கேட்கும் விஷயம். அதை ஏத்துக்க முடியலன்னா, 9 -5 வேலைக்கே போயிருக்கலாம்னு நினைப்பேன்.
அப்டினா எது கஷ்டம்னு கேட்டா, ஒரு நிலபரப்பை உருவாக்கி, அதன்மூலம் யாரோ ஒருவருக்கு ஒரு பொறியை கொடுப்பது, அதுவும் காலம் தாண்டி - மொழி தாண்டி மக்களின் வாழ்க்கையை பிரதபலிப்பதுதான். அது சாதாரண விஷயமில்லை.
அது இந்தப் படத்தில் நிகழ்ந்திருக்கு. வெற்றிமாறன் கிட்ட கேட்க எனக்கு அவ்வளவு கேள்விகள் இருக்கிறது, ஆச்சர்யங்கள் இருக்கிறது.
ஒரு உணவை சமைச்சுகிட்டு இருக்கும்போதே, அதை எப்படி இருக்குனு ருசிச்சு பாருங்கனு கொடுக்குற தைரியம் எத்தனை பேருக்கு இருக்கும்ன்னு தெரில. அப்படியொரு தைரியம், வெற்றி சாருக்கு இருந்தது. படத்துக்கு இடையிலயே வெற்றி சார் எங்கிட்ட ‘சொல்லுங்க சேது, உங்களுக்கு இந்தப் படத்துல என்ன வேணும், இதலாம் நாம செஞ்சிருக்கோம்... இதைப்பத்தி உங்க கருத்து என்ன’னு நிறைய கேட்டார். நானும் அவர்கிட்ட படத்தை பத்தி கேள்விகள் நிறையவே கேட்டேன்.
என் இயக்குநர்களிடம் நான் கேட்கும் கேள்விகள் என்பது, நான் யாரென்பதை என் இயக்குநர் தெரிந்துகொள்வதற்காகத்தான். அப்போதுதான் அவர்களுக்கு நான் யார், ஆடா மாடா இல்ல வேற எதும் விலங்கா.. என்னை எப்படி மேய்க்கணும்னெல்லாம் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்! அது தெரிந்தாதானே அவங்க எங்கிட்ட சரியா வேலை வாங்க முடியும்...!
அப்படி நான் வெற்றி சார் கிட்ட கேட்ட கேள்விகளுக்கு, அவரது பதில்களும், அதுக்கு அவரது வெளிப்பாடுகளும், அதன்வழியே நான் எடுத்துகிட்டதும்தான் வாத்தியார் கதாபாத்திரம். இந்தப் படத்தை பார்த்த பலரும், விஜய் சேதுபதியை தனியாவும், வாத்தியார் கதாபாத்திரத்தை தனியாவும் பேசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு. ஏன்னா,
நான் வாத்தியார் இல்ல. எனக்கு அந்த அறிவு கிடையாது. அந்த வாத்தியாரென்பது, வெற்றிமாறன் தான். நான் வெற்றியின் மைக் மற்றும் ஸ்பீக்கர்தான். அந்த வகையில், அவருடைய சிந்தனையை வெளியே சொன்னதுதான் நான்.
சூரி பற்றி பேசாமல் இந்த மேடையை கடந்துபோக முடியாது. வெண்ணிலா கபடிக்குழு படம் நடிக்கும்போது, ரெண்டு பேரும் சைதோபேட்டை க்ரவுண்ட்ல நைட் 2 மணிக்கு பேசிகிட்டே நடந்திருக்கோம். அன்றிலிருந்து இப்போவரைக்கும் அந்த நட்பு தொடருது. 5 -6 வருடங்களுக்கு முன் ஒருமுறை சூரிகிட்ட ‘உனக்கு நம்ம ஊர் முகம் இருக்கு… இப்படியே தேங்கிடாத. உனக்குள்ள நிறைய இருக்கு. அதை வெளிகாட்டிட்டே இரு’னு சொன்னேன்.
வண்டிமாடும் விவசாய நிலமும் மாதிரி, மூளையை ஒரேமாதிரி சிந்திச்சு பழகிட்டே, அப்படியே இருந்துரும். அதிலிருந்து வெளியே வருவது பெரிய விஷயம், சாதாரணமல்ல. அதை சூரி சிந்திச்சு, பல மனப்போராட்டங்களை கடந்து வந்து இந்தப் படத்துல வேலை செஞ்சிருக்கார்.
இந்த வெற்றி, சூரிக்கானது. சூரி… இந்த வெற்றி, வெற்றி சார் உனக்காக கொடுத்தது.- விடுதலை வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
இனி நீ (சூரி) அடுத்தடுத்த பண்ணப்போற விஷயங்கள்ல ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா இப்போ இந்த வெற்றியை வச்சு, ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்வாங்க. அதுல எது தேவை, யார் சொல்றாங்க, என்ன எடுத்துகலாம், எது வேணாம்னெல்லாம் கவனமா இருக்கணும்.
விடுதலை 2 வரும்போது, உங்களுக்கு தெரியவரும்… ‘இந்த காடு வேல்ராஜின் கண்ட்ரோலில்தான் இருந்தது’ என்று. அந்தக் காட்டின் அரசன் வேல்ராஜ்! லவ் யூ வேல்ராஜ்!
இந்தப் படம், கண்டிப்பா என் நியாபகத்தில் கல்வெட்டுல பொறித்த அனுபவமா இருக்கும். இதைக்கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
தொடர்ந்து படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் விஜய்சேதுபதி.