'உங்க ஊரு தலைவனை தேடி புடிங்க இது தான் நம்ம சர்கார்' என அதிரடி வசனங்களுடன் ரிலீஸ் ஆன விஜயின் சர்கார் டீசர்
’மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார். அதன்பின்னர் அவரின் மேடைப்பேச்சுக்கு பலரும் கலவையான விமர்சன கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் சர்காரின் டீசர் அக்டோபர் 19ல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் ’விகடன்’ பத்திரிகைக்கு பேட்டியளித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் "கூகுள் சி.ஈ.ஓ. சுந்தர் பிச்சைதான் ’சர்கார்’ படத்தில் இருக்கும் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன். அதனால்தான் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு சுந்தர் என பெயர் வைத்துள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார். மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் எனக் கூறியிருந்தார்.
இந்தப் பேட்டிக்கு பின்பு ’சர்கார்’ மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாகிவிட்டது. விஜய் ரசிகர்கள் ’சர்கார்’ படத்தின் டீஸராக மட்டுமே இதனை பார்க்கவில்லை. தங்களது ஆதர்ச நாயகனின் அரசியல் டீஸராகவும் இது அமையலாம் என்ற ஆவலுடன் காத்திருந்தனர். ஆவலுக்கு தீனி போடும் விதமாக இன்று மாலை வெளியானது ’சர்கார்’ டீசர்.
டீசரின் படி விஜய் வெளிநாடுகளில் சுற்றும் பெரிய தொழிலதிபர் என்றும் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ஊருக்கு வரும் விஜய்யின் ஓட்டு வேறு ஒருவரால் போடப்பட்டு விட்டது என்றும், இதனால் நமது அரசியலின் பரிதாப நிலையை உணரும் விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக களம் இறங்கி ’சர்கார்’ அமைக்கிறார் என்று ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் கதை கூற தொடங்கிவிட்டனர்.
ஆனால் ’சர்கார்’ டீசரில் கவனித்தக்க விஷயங்களாக ஒரு குடும்பமே தீயிட்டு தற்கொலை செய்துகொள்வது போல் ஒரு காட்சி வருவதும், கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது போன்ற காட்சியும் தமிழகத்தில் நடந்த பல நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன.
கடைசியில் வரும் 'உங்க ஊரு தலைவனை தேடி புடிங்க இது தான் நம்ம சர்கார்' என்ற வசனம், இத்திரைப்படம் மிகப்பெரிய அரசியல் படம் என்பதை நிச்சயப்படுத்துகிறது.