சினிமா

“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு

“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு

webteam

விஜய் நடித்துள்ள ’பிகில்’ படத்தின் கதை திருட்டு தொடர்பான வழக்கு, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய், பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பன்னீர்செல்வம் என்கிற செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் இந்த வழக்கு காப்புரிமை தொடர்பானது என்பதால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக செல்வா தரப்பில் கூறப்பட்டது. இதனால் உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் செல்வா. அதில், ‘256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதைச் சொல்லி இருந்ததாகவும் அதைத் திருடி ‘பிகில்’ படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் அட்லி தரப்பில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை வரை அவகாசம் கேட்டதால் வழக்குத் தள்ளி வைக்கப்பட்டது.