சினிமா

மூன்றே நாட்களில் ரூ.100 கோடி?!... வசூலை குவிக்கும் விஜய்யின் `மாஸ்டர்'!

மூன்றே நாட்களில் ரூ.100 கோடி?!... வசூலை குவிக்கும் விஜய்யின் `மாஸ்டர்'!

webteam

’மாநகரம்’, ’கைதி’ வெற்றிகளைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த, 'மாஸ்டர்' திரைப்படம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளியிடப்படவில்லை. திரையரங்குகளில்தான் வெளியிடப்படும் என படக்குழு உறுதியாக அறிவித்தது. பொதுமுடக்கத் தளர்வுகளைத் தொடர்ந்து பொங்கலையொட்டி வெளியானது மாஸ்டர் திரைப்படம்.

விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் 'மாஸ்டர்' திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு வருகின்றனர். 50 சதவீத இருக்கைகளில் ரசிகர்கள் அமர வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளியானாலும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த 9 மாதங்களாகக் காத்திருந்த ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து உற்சாகத்துடன் படம் பார்த்து வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ .26 கோடியை வசூலித்தது. தயாரிப்பாளர்கள் அதை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்போது, சமீபத்திய தகவல் என்னவென்றால், மாஸ்டர் 3 நாட்களில் தமிழகத்தில் ரூ.50 கோடியை எட்டியுள்ளது என்பதுதான்.

பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் படம் வெளியாகிய நிலையில் இவ்வளவு பெரிய வசூல் ஆகியிருப்பது தியேட்டர் அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், படக்குழு மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக திரையரங்க ‌உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "'மாஸ்டர்' மாநிலம் முழுவதும் நிரம்பிய காட்சிகளுடன் 5 ஆம் நாள் ரூ .100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அனைத்து இடங்களிலும் அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் விநியோகஸ்தர்கள் உற்சாகமாக உள்ளனர். மேலும் 'மாஸ்டர்' இன்னும் ஒரு வாரத்தில் லாபத்தை எட்டும்" என்று தெரிவித்துள்ளதாக Times of india செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு முன்னணி ஊடகமான Indian express மாஸ்டர் மூன்றே நாளில் ரூ.100 கோடி வருமானம் பார்த்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது. கவுசிக் என்பவரின் டுவீட்டை மேற்கோள்கட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் உண்மை தன்மை குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பு கூறினால்தான் தெரியவரும். ஒருவேளை மாஸ்டர் ரூ.100 கோடி வசூலித்தால் விஜய் நடிப்பில் ரூ.100 கோடி வசூலித்த 8வது படம் இதுவாக இருக்கும்.

கலவையான விமர்சனங்களை பெற்று மாஸ்டர் படம் தியேட்டர்களில் வரவேற்பை பெற்று வருகிறது. எது எப்படியானாலும் படத்தின் வசூல் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில தினங்கள் விடுமுறை என்பதால் படம் லாபம் வசூலிக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதற்கிடையே, மாஸ்டர் இந்தியில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.