தி கோட் மட்ட பாடல் web
சினிமா

‘மட்ட மட்ட ராஜ மட்ட’ வெளியானது 'G.O.A.T' படத்தின் 4வது பாடல்! எதிர்பார்ப்பை பூர்த்திசெய்தாரா யுவன்?

நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் ‘மட்ட’ என தொடங்கும் 4வது சிங்கிள் இன்று வெளியானது.

Rishan Vengai

நடிகர் விஜய் லியோ திரைப்படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணைந்து நடித்திருக்கும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்). இந்தப் படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம் கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

கோட் படம்

கோட் படத்தின் பாடல்களாக வெளியான ‘விசில்போடு, சின்ன சின்ன கண்கள் மற்றும் ஸ்பார்க்’ முதலிய மூன்று பாடல்களும் பெரியளவு விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை, மாறாக ஸ்பார்க் படத்தில் நடிகர் விஜயின் டிஏஜிங் லுக் படுமோசமான விமர்சனத்தை பெற்றது. சின்ன சின்ன கண்கள் மெலோடியாக பலருக்கும் பிடித்திருந்தது.

தி கோட் பட பாடல்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபிறகான முதல் படம் மற்றும் அரசியலில் முழுவதுமாக இறங்குவதற்கு முன் இருக்கும் 2 படங்களில் ஒன்று என்பதால், இப்படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கோட் படத்தின் ’மட்ட’ என்ற நான்காவது பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தாரா யுவன்?

புதியகீதை திரைப்படத்திற்கு பிறகு விஜயின் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா, எப்படி இசையமைக்க போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. ஆனால் வெளியான 3 பாடல்களிலும் விஜய் ரசிகர்களை கவரும்படியான பாடலை யுவன் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்தனர். அதற்கும்மேல் யுவனின் காலம் முடிந்துவிட்டது என்றும் விமர்சனம் வைத்தனர்.

மட்ட பாடல்

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு “ஆளப்போறான் தமிழன், வெறித்தனம், சிங்கப்பெண்ணே” முதலிய சூப்பர்டூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கும் பாடலாரிசியர் விவேக் ‘மச்சி கெடா மஞ்ச சட்ட மம்டி வரான் பள்ளம் வெட்ட மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாரு கிட்’ எனத்தொடங்கும் வரிகளை பதிவிட்டு ஹைப்பை கிளப்பியிருந்தார்.

அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முதல் படத்தில் பணியாற்றும் அனைவரும் அவர்களுடைய விருப்ப பாடலாக ‘மட்ட’ பாடலை குறிப்பிட்டதால் பாடலின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது.

மட்ட பாடல்

இந்த சூழலில் படத்தின் நான்காவது பாடலான ’மட்ட’ பாடல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று பாடல்களை விட மட்ட பாடல் விஜய் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது. ‘இந்த பாட்டை வச்சிகிட்டா எங்கள ஏமாத்துன, இந்த பாட்டை தான் நீங்க முதல்ல ரிலீஸ் பண்ணிருக்கனும்’ முதலிய பாசிட்டாவான கமெண்ட்டை பதிவிட்டு வருகின்றனர்.

பாடல் எப்படி இருக்கிறது?

பாடலை பொறுத்தவரையில், ”என்னா நட என்னா நட ஏறி வரா ஜிலுக்கா கண்ணதாசன் சொன்ன பொண்ணு கண்ணு முன்ன இருக்கா ஊறவிட்ட தேனுக்கட மாரடப்பு குடுத்தா மன்மதனே அம்பெடுத்து தன்னக் குத்தி கெடக்கான்” என ஒரு டான்ஸ் மோடிற்கான பாடலாகவே விவேக் எழுதியுள்ளார்.

ஆனால் வெளியாகியிருக்கும் பாடலில் எந்தவிதமான பெண்கள் ஆடும்படியான காட்சிகள் இடம்பெறவில்லை. த்ரிஷா ஒரு பாடலில் ஆடியிருக்கிறார் என சொல்லப்படும் வேளையில் படக்குழு அதனை ஒப்புக்கொள்ளாமல் இருந்துவருகிறது.

மற்றபடி விஜய் ரசிகர்களை டார்கெட் செய்யும் வகையில் ஒவ்வொரு முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் மட்ட பாடலிலும் இடம்பெற்றுள்ளது. விஜய் சிறந்த நடின அசைவுகளை பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். ‘மட்ட மட்ட ராஜ மட்ட, எங்க வந்து யாருகிட்ட’ என வைப்பேற்றும் பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.