சினிமா

இன்னொரு ‘குடும்பங்கள் கொண்டாடும்…’ ஹிட்டா?!’ - ‘பீஸ்ட்’ திரை விமர்சனம்

இன்னொரு ‘குடும்பங்கள் கொண்டாடும்…’ ஹிட்டா?!’ - ‘பீஸ்ட்’ திரை விமர்சனம்

webteam

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ‘பீஸ்ட்’. இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான ‘டாக்டரும்’, விஜய்யின் முந்தைய படமான ‘மாஸ்டரும்’ நல்ல வரவேற்பு பெற்றன என்பதால், இவர்கள் காம்போவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மாஸ் வைரல் ஆன அரபிக்குத்து பாட்டு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, விஜய்யின் தொலைக்காட்சி பேட்டி என வரிசையாக ஹைப்தான். போதாததுக்கு ‘நீ மோதப் போறது ராக்கி பாய் கூட’ என ‘கே.ஜி.எஃப். 2’ வேறு நாளை வெளியாகவிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லியிருக்கிறது ‘பீஸ்ட்’ டீம்?

ஒரு வரியில் சொல்வதென்றால் ‘அவ்வளவு சூப்பராகவும் இல்லை… அவ்வளவு சுமாராகவும் இல்லை!’

பேரைச் சொன்னால் யாருக்கும் தெரியாத ரகசிய உளவாளிதான்; ஆனால், தெரிந்தபின் மறக்க முடியாத மனிதராக ஆகிவிடுவார் வீரராகவன். அப்படியொரு முரட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் கலந்த வீரன். வேலை விஷயமாக ரகசிய உளவாளி வீரராகவன் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் இருக்கும்போது, தன் தலைவனை விடுவிக்கக் கோரும் ஒரு குழு, அந்த ஷாப்பிங் மாலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. உள்ளேயிருக்கும் நம்ம முரட்டு வீரன் அவர்களை என்ன செய்கிறார் என்பதே ‘பீஸ்ட்’.

(ஸ்பாய்லர் எல்லாம் இல்லை. டிரெயிலரிலே சொன்ன கதையைத்தான் மீண்டும் சொல்லியிருக்கிறோம்.)

‘சச்சின்’ விஜய் போல அழகாக, அமைதியாக ஒரு குழந்தை மற்றும் சில பலூன்களுடன் அறிமுகம் ஆகிறார் விஜய். மெல்லிய புன்னகையோடு சாய்ந்து உட்கார்ந்தால், அதிரடி அட்டாக் ஒன்றை செய்துவிட்டு மீண்டும் அமைதி ஆகிறார். காமெடி, ஆக்‌ஷன் என வீரராகவன் கதாபாத்திரத்தை நிஜ விஜய்யை மாடலாக வைத்தே உருவாக்கியிருக்கிறார் நெல்சன்.அதனால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ‘பக்கா சொக்கா’வாக பொருந்திப் போகிறார் விஜய்.

ஸ்மார்ட் விஜய்க்கேற்ற ஜோடிதான் பூஜா ஹெக்டே. பூஜாவின் செகண்ட் இன்னிங்க்ஸ் நன்றாகத் தொடங்கியிருக்கிறது. இனி அடிக்கடி பார்க்கலாம். அதன்பிறகு வரிசையாக சொல்ல ஏகப்பட்டக் கதாபாத்திரங்கள். எல்லோரும் இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாம் எனத் தோன்ற வைத்தாலும் ,மேன் ஆஃப் தி மேட்ச் (செகண்ட்) வாங்குவது வி.டி.வி. கணேஷ்தான். அவர் குட் மார்னிங் சொன்னால் கூட சிரிக்க தயாராகிவிடுகிறது தியேட்டர்.

‘கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் பண்ணலாம்.. அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்கப் போறவனுக்கு முன்னாடியே?’. கொஞ்சம் அதிகம் சிரித்தால், அடுத்த ஜோக் மிஸ் ஆகிடும் என கிரேஸி மோகன் வசனத்துக்குச் சொல்வார்கள். கிட்டத்தட்ட நெல்சன் அப்படித்தான் எழுதியிருக்கிறார். அதைக் கச்சிதமாக கேட்ச் செய்து டெலிவரி செய்திருக்கிறார் கணேஷ். மூன்றாமிடம் சந்தேகமே இல்லாமல் செல்வராகவனுக்கு. அந்த அசால்ட் உடல்மொழியும், ஷார்ப் ஆன பார்வையும் செம செம. இந்தப் பரிமாணம் அவரை நிச்சயம் இனி பிஸியாகவே வைத்திருக்கும்.

இந்த காமெடி கூட்டணி சேர்ந்து ‘பீஸ்ட்’ முதல் பாதியை முழு ‘ஃபீஸ்ட்’ ஆகவே படைத்திருக்கிறார்கள். கூடுதலாக கொஞ்சம் பாப் கார்ன் வேண்டுமென இடைவேளைக்குப் போவதுதான் தவறாகிப் போகிறது. இரண்டாம் பாதியில் சிரிப்பும் குறைந்து, இலக்கும் தவறி எங்கெங்கோ அழைத்துப் போகிறது திரைக்கதை. இறுதியில் ‘நாம வந்திருக்கிறது பாகிஸ்தான் பார்டர்’ என்கிறார்கள். அந்த ஏரியாவை மட்டும் சரி செய்திருந்தால், விஜய்க்கும், நெல்சனுக்கும் கெரியர் முழுக்க இன்னொரு மறக்க முடியாத படமாக மாறியிருக்கும்.

விஜய் அழகாக இருக்கிறார். ஃபிட் ஆக இருக்கிறார், அனிருத் பாடலக்ள் ஆசம் என எத்தனை முறை சொல்வது? சிக்கன் தந்தாலும் சரி, மஷ்ரூம் தந்தாலும் சரி. என்னால் சூப்பரான பிரியாணியாக மாற்ற முடியுமென்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் அனிருத். விஜய் சொன்னது போல மீண்டும், மீண்டும் ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருப்பது சாதாரண விஷயமல்ல. நீங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் பெரியது ப்ரோ. ஆனால், நெல்சன் இப்படி பாகிஸ்தான் பார்டருக்கு அழைத்துச் சென்றால் என்ன செய்வது?

மனோஜின் ஒளிப்பதிவும், நிர்மலின் படத்தொகுப்பும் குறை சொல்ல முடியாதவை. ஒரு திருவிழாக் கொண்டாட்ட படத்துக்குத் தேவையானவற்றை சரியே செய்திருக்கிறார்கள்.

இறுதியாக நெல்சன். ஒரு சாதாரண சீனைக் கூட செம ஸ்வீட் & லாஃப்டராக இவரால் எளிதில் மாற்ற முடிகிறது. நல்ல நடிகர்களும் கிடைத்துவிட்டால் அது இன்னும் சிறப்பானதாகிறது. ஆனால், அந்த சிரிப்பைத் தாண்டினால், கொஞ்சம் ஜெர்க் ஆவது போல் தெரிகிறது. ‘பீஸ்ட்’டில் அந்தக் குழந்தை செண்டிமெண்ட் கொஞ்சம் வொர்க் அவுட் ஆனாலும், மற்ற எமோஷன் ஏரியா வீக்காகவே இருக்கிறது. இடைவேளை கார் ஃபைட் எல்லாம் ‘ப்ளே ஸ்டேஷன் 5 தான ப்ரோ’ என்பதாகவே இருக்கிறது. ஒரு சண்டைக்குத் தேவை வலுவான காரணம். ‘ஷாப்பிங் மாலுக்குள் இருக்கும் யார் செத்தாலும் பரவாயில்லை; 2 ஜோக் சொல்லிட்டு சாகச் சொல்லுங்க’ என ரசிகன் எதிர்பார்த்தால் பிரச்னை ரசிகனிடம் இல்லை என்பதுதான் சேதி.

இப்போதெல்லாம் ரிலீஸுக்கு முன்பு இண்டர்நேஷனல் படம் என சொல்வதும், ரிலீஸூக்குப் பின்னால் ‘குடும்பங்கள் கொண்டாடும்’ எனச் சொல்வதும்தான் டிரெண்ட். ‘பீஸ்ட்’டும் அதற்கு விதிவிலக்காக இருக்காது என்றே தோன்றுகிறது.