Vijay antony PT
சினிமா

“இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” - விளக்கமளித்த விஜய் ஆண்டனி! நடந்தது என்ன?

இயேசு கூட குடிச்சிருக்காரு என செய்தியாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி பேசியதற்கு கண்டனம் எழுந்த நிலையில், தவறான புரிதலுக்காக விளக்கமளித்துள்ளார்.

Rishan Vengai

இசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகில் காலடிவைத்த விஜய் ஆண்டனி, நான், சலீம், பிச்சைக்காரன் முதலிய ஹிட் படங்களில் நடித்து தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகராகவும் மாறினார். சமீபத்தில் பிச்சைக்காரன் - 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாராம் எடுத்த விஜய் ஆண்டனி, ரோமியோ என்ற புதிய படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை மிருணாளினி ரவி இருவரும் லீட் ரோலில் நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. சம்மர் லீவுக்கு திரைக்கு வரும் இப்படத்தை விஜய் ஆண்டனியின் குட் டெவில் புரொடக்ஷன் தயாரித்திருக்கும் நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றியுள்ளது.

Romeo

தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் வெளியாகும் இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது ரோமியோ படத்தின் போஸ்டர் பிக்சரில் ’பெண் மது குடிப்பது’ போன்ற காட்சி இடம்பெற்றது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது குடிப்பழக்கம் குறித்தும், குடி குறித்தும் பேசிய விஜய் ஆண்டனி ’இயேசுவும் கூட மது குடித்திருக்கிறார்’ எனக்கூற சம்பவம் பேசுபொருளாக மாறியது.

இயேசு கூட குடித்திருக்கிறார்.. சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி!

ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படமாக ரோமியோ உருவாகியிருப்பதால், பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு ஜாலியாக பதிலளித்த விஜய் ஆண்டனி பேச்சு சர்ச்சையில் சிக்கியது. அப்போது ரோமியோ படத்தின் போஸ்டர் பிக்சரில் ’பெண் மது குடிப்பது’ போன்ற காட்சி இடம்பெற்றதை சார்ந்து பெண்கள் குடிக்கலாமா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, “ஆண் குடிக்கலாம் என்றால் பெண்ணும் குடிக்கலாம். இருவரும் சமம் தானே” என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என போராடுகிறார்கள், அப்போ நீங்கள் மதுவுக்கு ஆதரவாளரா என கேட்க, “அப்படியெல்லாம் இல்லை, ஜீசஸ் காலத்தில் இருந்தே மது வெவ்வேறு பெயர்களில் புழகத்தில் இருந்துகொண்டுதான் வருகிறது. ஜீசஸ் கூட குடித்திருக்கிறார். அவர் காலத்தில் திராட்சை ரசம் என இருந்தது. பின்னர் மன்னர்கள் காலத்தில் சோமபானம் என இருந்தது. ஒவ்வொரு காலத்திலும் குடி இருந்துள்ளது” என்று பேசிய விஜய் ஆண்டனி பேச்சு சர்ச்சையில் சிக்கியது.

கண்டனம் விடுத்த தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு!

விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கடும் கண்டனம் விடுத்தது.

Romeo

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “உலகம் எங்கும் வாழும் அனைத்து கிறிஸ்துவ பெருமக்களாலும் ஜாதி மதம் மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொதுவெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து எச்சரித்தது.

இயேசுவை தவறாக சித்தரிக்க கனவில் கூட வராது! - விஜய் ஆண்டனி

தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஜய் ஆண்டனி சர்ச்சை பேச்சுக்காக விளக்கமளித்துள்ளார்.

விஜய் ஆண்டனி பதிவிட்டிருக்கும் பதிவில், “அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம். நான் முன் தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல 2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசுபிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறியிருந்தேன்.

ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தம் படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது" என பதிவிட்டுள்ளார்.