சினிமா

மாஸ் காட்டிய ’ஜே.டி Vs பவானி’ - பொங்கல் ட்ரீட் ‘மாஸ்டர்’ பட விமர்சனம்

மாஸ் காட்டிய ’ஜே.டி Vs பவானி’ - பொங்கல் ட்ரீட் ‘மாஸ்டர்’ பட விமர்சனம்

webteam

தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய நாயகர்கள் இணைந்து நடிப்பது இப்போது எல்லாம் அபூர்வமாகிவிட்டது. அப்படி நடித்தாலும் அதில் ஒரு கதாநாயகனுக்கே அதிகளவு கவனம் இருக்கப்படும்விதமாக படமாக்கப்படுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். பாலிவுட்டில் நான்கைந்து நாயகர்கள் கூட சேர்ந்து நடிப்பதும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு அதில் கிடைப்பதும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று. அந்தவகையில் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஒரு அடியை எடுத்துவைத்திருக்கிறது தமிழ் சினிமாவில். அதற்காக மொத்த குழுவினருக்கும் குறிப்பாக நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பாராட்டை தெரிவித்துக்கொண்டு வாருங்கள் மாஸ்டர் திரைப்படத்தை அலசலாம்.

நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் இளம் குற்றவாளிகளை தான் செய்யும் தவறுகளுக்கு கேடயமாக உபயோகித்துக் கொள்ளும் பவானி என்கிற வில்லனை அடக்க, சென்னையில் பகல் எல்லாம் கல்லூரியில் மாணவர்களுக்கு நல்வழியை கற்பித்துவிட்டு, தனிப்பட்ட சோகங்கள் காரணமாக இரவெல்லாம் போதையில் மிதக்கும் ஜேடி என்கிற ஆசிரியர் வருகிறார். இதுதான் மாஸ்டர் படத்தின் கதை. எளிமையான இந்த கதைக்கு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதைதான் இங்கே நாம் அலசப்போவது.

மாநகரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்திக்கொண்ட லோகேஷ் கனகராஜ் என்கிற இளைஞர் இந்தப்படத்தில் எதிர்கொண்டிருக்கும் முதல் சவால் விஜய் என்கிற மிகப்பெரிய மாஸ் ஹீரோ. விஜய் போன்ற ஒரு நடிகருக்கு திரைக்கதை எழுதுகையில் கொண்டாட்ட மனநிலை ஒன்று வேண்டும். ஏனெனில் நாம் சாதாரணமாக அணுகும் கமெர்ஷியல் படங்களுக்கு பின்னால் இருக்கும் திரைக்கதை உழைப்பு மிக பலமாய் இருத்தல் அவசியம். அரைச்ச மாவை அரைக்கும் வகையறா திரைக்கதைகள் இங்கே உடனே புறந்தள்ளப்படும். அந்தவகையில் லோகேஷ் முக்கால்வாசி கிணறு தாண்டியிருப்பதாகவே சொல்லலாம். 

அதற்கு முதல் காரணம் கேரக்டர் ஸ்கெட்ச் எனப்படும் பாத்திர குணாதிசயங்களை மிகத்தெளிவாக முதல் அரைமணி நேரத்திற்குள் நமக்கு சொல்லிவிடுகிறார். பவானியாக நடித்திருக்கும் விஜய்சேதுபதியின் பின்னணி என்ன? அவர் எதனால் கெட்டவனாக மாறினார்? அவரது உடல்மொழி எப்படிப்பட்டது? அவர் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி கையாளுவார் என்பதை எல்லாம் தெளிந்த நீரோடை போல விளக்கிவிடுகிறார். அதனால் உடனடியாக நாம் பவானி பாத்திரத்தோடு ஒன்றிவிடுகிறோம். அதேதான் நாயகன் விஜய்க்கும்.

இதுவரை திரையில் நாம் கண்டிராத விஜயை இதில் காண்கிறோம். ஒருபக்கம் எப்போது பார்த்தாலும் போதையில் இருந்தாலும் கூட ஒரு பலத்த உற்சாகம் கொண்ட கதாபாத்திரமாக ஜேடி கதாபாத்திரம் உலாவருகிறது. விஜய் ரஜினியை பின்பற்றி அவரே நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதை கண்டிருக்கிறோம். அதன் இன்னொரு பரிணாமமாக இதில் வருகிறார். அந்த காட்சிகள் எல்லாமே சிரிப்பொலியால் அரங்கை நிறைக்கிறது.

விஜய் படங்களில் கதாநாயகன் அறிமுகப்பாடல்கள் மிகப்பிரசித்தி பெற்றவை. இந்தப்படத்தில் பாடலாக இல்லாமல் "வாத்தி கமிங்" என்கிற இசை மட்டுமே ஒலிக்கிறது. அதற்கு மிகவும் ரசிக்கும்படியாக நடனம் அமைத்தது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இப்படியாக இதற்குமுன்னால் காணாத ஒரு விஜயை காண்பதே மிகப்பெரிய ஆசுவாசமாக இருப்பதை நாம் உணரலாம்.

படத்தின் முதல் பகுதி முழுக்கவும் இப்படி ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக இடைவேளையை நோக்கி படம் நகருகையில் ஒரு பெரும் பதைபதைப்பை இயக்குனர் உண்டாக்கி இருக்கிறார். அதற்கு முத்தாய்ப்பாக விஜய் துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களில் இடைவேளை காட்சியின்போது சொன்ன "ஐ ஆம் வெயிட்டிங்" என்கிற புகழ்பெற்ற வசனத்தை இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சொல்கிறார். உண்மையில் மாஸ் பட ரசிகர்களுக்கு அந்த இடைவேளைக்கு முந்தையை 25 நிமிட காட்சிகள் அட்டகாசமான விருந்து.

ஆனால் இரண்டாம் பகுதியோ முதல் பகுதிக்கு முற்றிலும் எதிர்மாறாக இருப்பதுதான் இங்கே கவலைக்குரியது. சற்று ஏமாற்றமாக இருந்தது என்றுமே கூட இதைச் சொல்லலாம். முதல் பகுதியில் அவ்வளவு அற்புதமாக, புதியதாக இருந்த காட்சிகளுக்கு மாறாக, இரண்டாம் பகுதி முழுதும் ஏற்கனவே பல மசாலா படங்களில் நாம் கண்ட காட்சிகளே வருகின்றன. அத்தனை வலிமையான பவானி கதாபாத்திரத்தை எதிர்க்கும் ஜேடி என்கிற கல்லூரி ஆசிரியர் வெறுமனே தன் அதிரடி சண்டைகளால் மட்டுமே வில்லனை சமாளிக்கிறார். அதுவும் பவானியின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினை மட்டுமே புரிகிறார். அவராக எதுவுமே செய்வதில்லை. இதுவே இரண்டாம் பாதியின் பின்னடைவுக்கு மிகமுக்கிய காரணம்.

விஜய் தனது வசீகரமான உடல்மொழி மூலம் இந்த முறையும் நம்மை கவர தவறவில்லை. படத்தில் இரண்டு பெரிய சோகக் காட்சிகள் உண்டு. அந்த காட்சிகளில் விஜயின் நடிப்பு பிரமாதமாக இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. ஏனெனில் படத்தின் நாயகன் வேதனைப்படுகையில் பார்ப்பவர் மனநிலையும் அவ்வேதனையை அனுபவித்தலே சிறந்த ஒரு சினிமா அனுபவம் கொடுக்கும். அதை விஜய் சந்தேகம் இன்றி அளித்திருக்கிறார்.

ஆனால் படத்தில் விஜயை விட ஒருபடி மேலே ஜொலிப்பது என்னவோ பவானியாக வரும் விஜய்சேதுபதிதான். இதற்கு முன்பு விக்ரம் வேதாவில் இதேபோன்றதொரு விஜய்சேதுபதி காணக்கிடைத்தார். சற்றே கிண்டலாக அவர் பேசும் வசனங்களும், அதற்கேற்ற கச்சிதமான உடல்மொழியும் பவானி பாத்திரத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. என்னதான் விஜய்சேதுபதி மற்ற படங்களில் இப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தாலும் கூட, அதற்காக எல்லாம் எந்தவித சமரசமும் இல்லாமல் "வில்லன்னா வில்லன்தான்" என்பது போல நடித்திருப்பது எனக்குத் தெரிந்து இன்றைய நடிகர்கள் யாரும் செய்யத்துணியாத ஒன்று. வரவேற்கவேண்டிய விஷயம் இது.

லோகேஷ் கனகராஜ் தன்னால் இயன்ற அளவு மிகவும் புத்துணர்ச்சியான ஒரு படம் தர விழைந்திருக்கிறார். அது காட்சிக்கு காட்சி தெரிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளின் நீளம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. குறிப்பாக அந்த லாரி சண்டை காட்சி. படத்தில் சற்றும் ஒட்டாத ஒரு விஷயமாக அது தெரிவதை நீங்கள் படம் பார்க்கும்போது உணரலாம். ஆனால் அதைமீறி சின்ன சின்ன விஷயங்களில் லோகேஷ் ஈர்க்கவே செய்கிறார். குறிப்பாக பழைய பாடல்களை அவர் பயன்படுத்தியிருக்கும் விதம். "கருத்தமச்சான் கன்னத்துல எதுக்கு வச்சான்.." பாடலும், "வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி" என்கிற க்ளைமாக்சில் விஜய் பாடி ஆடும் பாடலும் லோகேஷின் முத்திரை என்றே சொல்லலாம். அவரது கைதி படத்திலும் கூட இப்படி அவர் உபயோகப்படுத்தி இருக்கிறார் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

இதற்கு முன்பு லோகேஷ் எடுத்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்டவை. முதன்முறையாக அதைவிட்டு வெளியில் வந்து ஒரு படம் செய்திருக்கிறார். அதுபோக ஐந்து பாடல்களும் இதில் உண்டு. அதையெல்லாம் கையாண்ட விதத்தில் அங்கே இங்கே சில சறுக்கல்கள் இருந்தாலும் கூட நல்ல தொழில்நுட்ப குழு ஒன்று அமைந்திருப்பதால் படம் எங்கேயும் அலுப்புத்தட்டவில்லை. குறிப்பாக அனிருத் தனது இசையின் மூலம் மிகப்பெரிய உற்சாகத்தை படம் முழுக்க தந்துகொண்டே இருப்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு கபடி போட்டி ஒன்று படத்தில் இருக்கிறது. அதற்கு பொருத்தமாக விஜய் நடித்த கில்லி படத்தின் தீம் இசையை உபயோகித்திருப்பது குழுவின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அந்த காட்சிகளில் எல்லாமே பொறிபறக்கிறது.

ஆனால் சாந்தனு, ஆன்ட்ரியா, நாசர், ஸ்ரீமன், சஞ்சீவ், கௌரி என பல நடிகர்கள் படத்தில் இருந்தாலும் கூட எல்லோரும் ஏதோ செட் ப்ராப்பர்டிகள் போல வந்துபோவது கவலைக்குரியதே. ஏனெனில் அவர்களை திரையில் காண்பிக்கையில் நமக்குள் ஏற்படும் எதிர்பார்ப்புகள் எதற்கும் படத்தில் நியாயம் செய்யப்படவில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம் என்கிற அளவில்தான் அந்த பாத்திரங்கள் இருக்கின்றன. லோகேஷ் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் ஆச்சர்யபப்டும் விதமாக அர்ஜுன் தாஸ், மகேந்திரன் போன்றவர்களின் நடிப்பு மெச்சும்படியாக இருந்தது.

ஒரு பொங்கலன்று திரையரங்கிற்கு சென்று பார்க்கக்கூடிய வகையிலான ஒரு படமாகவே மாஸ்டர் இருக்கிறது. இரண்டாம் பகுதியின் குறைகளை சற்றே களைந்திருந்தால் எல்லாவகையான ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திரையரங்கில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியோடு கண்டுகளியுங்கள்.

- பால கணேசன்