தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக, நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி அறிவித்தது முதல் பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் நிலையில், இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூசவலைத்தளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் சென்னை மாமல்லபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக அறிவித்தனர்.
இது ஒருபுறம் அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், திருமணம் ஆன 4 மாதங்களில் குழந்தை பிறந்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டது. குறிப்பாக வாடகைத் தாய் விதிமுறைகளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி பின்பற்றினார்களா? என சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்களும் நிலவியது.
இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவிற்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாக மருத்துவ ஊரக பணிகள் இயக்குனரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக தற்பொழுதான் வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஜோடி கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. அதனால் விதிமுறைகளை மீறினார்களா எனவும் அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட்டபட்டுள்ளது” எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களிடம் கவனம் செலுத்துங்கள். அவர்கள் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். யார் உங்களிடம் சிறப்பாக இருக்க விரும்புகிறார்களோ, அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அதுதான் உண்மை என்றும் அவர் கேப்ஷன் இட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில் “எல்லாம் சரியான தருணத்தில் உங்களை வந்து சேரும். அதுவரை பொறுமையாய், நன்றியுடன் இருங்கள்” இவ்வாறு விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.