துணிவு படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள், அவரது அடுத்த படத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். பொதுவாக அஜித் படத்தை இயக்கும் இயக்குநர் அறிவிக்கப்பட்டாலும் அவரது படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள்தான் அறிவிக்கப்படாமல் இருக்கும்.
இதனால் செல்லுமிடமெல்லாம் அப்டேட் கேட்டு வருவதையே அஜித் ரசிகர்கள் வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். விஸ்வாசம், வலிமை படங்களுக்கு அப்படியே நடந்தது. குறிப்பாக வலிமை படத்தின் அப்டேட் கேட்கப்படாத இடமே இருக்காது. ட்விட்டர் தளத்தில் ஹேஷ்டேக்கே ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு பதிவுகள் பறந்தன.
இப்படி இருக்கையில், அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போவது யாரென்று இன்னும் அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் சற்று ஆவலோடுதான் இருக்கிறார்கள். ஏனெனில் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவே லைகா நிறுவனம் அறிவித்தது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய ஒன்லைனை கேட்டு அஜித் ஓகே சொல்லியிருந்தாலும், முழுக்கதை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால் ஏகே 62ல் இருந்து அதிகாரப்பூர்வமாகவே விக்னேஷ் விலகியிருக்கிறாராம்.
அதற்கு சாட்சியாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் இருந்து AK62 என்பதை நீக்கிவிட்டு WIKKI6 என மாற்றிய விக்னேஷ் சிவன், கவர் பிக்சராக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் தூக்கியிருக்கிறார். ஆகையால் அஜித்தின் 62வது படத்தை இயக்கப்போவது விஷ்ணு வர்தனா அல்லது மகிழ் திருமேனியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆனால் விஷ்ணு வர்தன் ஏகே 62-ஐ இயக்குவது சாத்தியமில்லையாம். ஏனெனில் அவர் சல்மான் கானை வைத்து இயக்குவதற்கான பணிகளில் ஏற்கெனவே இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சல்மான் உடனான பட வேலைகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப் போவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
ஆகையால் ஏகே 62-ஐ மகிழ் திருமேனியே இயக்குவார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அப்படி முடிவானால் ஏகே 62-க்கு சந்தோஷ் நாராயணன் அல்லது சாம் சி.எஸ். இசைமைப்பாளராக பணியாற்றுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஏகே 62 குறித்த முக்கிய அப்டேட் இந்த வாரத்திற்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே லண்டன் சென்றிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி ஏகே 62க்கான கதையை லைகா நிறுவனம் மற்றும் அஜித்திடம் சொல்லியிருப்பதாகவும் பட வேலைகளுக்கான முன்னோட்டத்தை தொடங்கும்படி சொல்லியிருப்பதாகவும் தகவல் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.