சினிமா

சர்ச்சையான மனு சர்மா விடுதலை பற்றி என்ன சொல்றீங்க? - கருத்து சொன்ன வித்யா பாலன்

சர்ச்சையான மனு சர்மா விடுதலை பற்றி என்ன சொல்றீங்க? - கருத்து சொன்ன வித்யா பாலன்

webteam

ஜெசிகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மனு சர்மா விடுதலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகை வித்யா பாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

1999ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த வினோத் சர்மாவின் மகனான மனு சர்மா, டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஜெசிகா
லால் என்ற மாடல் அழகியைச் சுட்டுக்கொன்றார். உணவகத்தில் மது ஊற்றிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அவர் சுட்டுக்கொன்றதாகக்
கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த டெல்லி கீழமை நீதிமன்றம் மனு சர்மாவை விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு மனு சர்மா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் மனு சர்மா திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தரப்பில் 2010ஆம்
ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, மீண்டும் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறையில்
நன்னடத்தையுடன் செயல்பட்டதாக 2018ஆம் ஆண்டு மனு சர்மா திறந்த வெளி சிறைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் சிறையிலிருந்து கொண்டே, கைதிகள் மறுவாழ்வு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார். இந்நிலையில் மனு சர்மா நன்னடத்தை
காரணமாக விடுதலை செய்யப்பட்டார். டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அளித்த பரிந்துரையை ஏற்று, துணை நிலை ஆளுநர்
அனில் ஃபைசால் அவருக்கு விடுதலை உத்தரவைப் பிறப்பித்தார்.

மனு சர்மாவின் விடுதலைக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மனு சர்மாவின்
விடுதலை குறித்து பாலிவுட் நடிகை வித்யா பாலன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், என் கருத்தைச் சொல்லவேண்டுமென்றால், அவர் பற்றிப் பேசவோ,
அவரைப் போலச் சிறையில் காலம் கடத்தியவர்கள் பற்றிப் பேசவோ என்னிடம் நேரம் இல்லை. அதுதான் எப்போதும் என் எண்ணம். ஆனாலும்
அவர் வேறு ஒரு புது வாழ்வைத் தொடங்கி, புதுமையான ஒருவராக மாறி இருப்பார் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு வெளியான no one killed jessica என்ற திரைப்படத்தில் வித்யாபாலன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது