சினிமா

பழம்பெரும் மலையாள நடிகை கேபிஏசி லலிதா காலமானார்

பழம்பெரும் மலையாள நடிகை கேபிஏசி லலிதா காலமானார்

Veeramani

பழம்பெரும் மலையாள நடிகை கேபிஏசி லலிதா உடல்நலக்குறைவால் காலமானார்.

74 வயதாகும் அவர் தமிழில் விஜய்யின் 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்து கவனம் ஈர்த்தவர். 'அலைபாயுதே', 'காற்று வெளியிடை' உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இரண்டு முறை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் வென்றிருக்கிறார். வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 10 வயது முதல் நாடகத்தில் நடிக்கத் துவங்கிய லலிதா, இடதுசாரி நாடகக் குழுவான 'கேரள மக்கள் கலைக்கழக'த்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 1969 ஆம் ஆண்டு கே.எஸ் சேது மாதவன் இயக்கத்தில் வெளியான 'கூட்டுக்குடும்பம்' படத்தில் நடிகையாக அறிமுகமானவர், இதுவரை 550-க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்துள்ளார். இவர் காலமான பிரபல இயக்குநர் பரதனின் மனைவி ஆவார்.

குறிப்பாக, புகழ்பெற்ற மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்றவுடன் 'கேரள சங்கீத நாடக அகாடமி'யின் தலைவராக லலிதா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதிச்சடங்கு (இன்று புதன்) முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது.