சினிமா

ஓடிடியில் 'அசுரன்' ரீமேக் 'நாரப்பா'... - ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் வெங்கடேஷ்

ஓடிடியில் 'அசுரன்' ரீமேக் 'நாரப்பா'... - ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் வெங்கடேஷ்

நிவேதா ஜெகராஜா

'அசுரன்' ரீமேக் 'நாரப்பா' திரைப்படம் ஓடிடியில் வெளியிடுவதை ஒட்டி, தனது ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' சூப்பர் ஹிட் அடித்ததோடு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை குவித்தது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் 'நாரப்பா'வில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ், பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடிக்க, இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ட்ரெய்லர் காட்சிகள் `அசுரன்' படத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல் சீன் பை சீன் ரீமேக் செய்ததுபோல் இருந்தது. இதற்கிடையே, இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வெங்கடேஷ், தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.

அவர் மன்னிப்புகோர காரணம், படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடி தளத்தில் ரீலீஸ் செய்வதுதான். வரும் ஜூலை 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது இந்தப் படம். முன்னதாக தியேட்டர் ரிலீஸ் என்று கூறப்பட்ட நிலையில், கொரோனா சூழ்நிலைகள் காரணமாக ஓடிடி தளத்தில் ரீலீஸ் செய்ய முடிவெடுத்தது படக்குழு. இதனால் தியேட்டர் அதிபர்கள் உட்பட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில்தான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் வெங்கடேஷ், ``இந்த முடிவால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைவார்கள். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தியேட்டர் வெளியீடாக இல்லாமல், தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் வெளியீட்டை நோக்கி தள்ளப்பட்டதற்கான காரணத்தை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படத்தை தமிழில் 'அசுரன்' படத்தை தயாரித்த 'கலைப்புலி' தாணு, சுரேஷ் பாபு என்பவருடன் இணைந்து தயாரித்திருந்தார். வெங்கடேஷின் இந்தப் படம் மட்டுமல்ல, மற்றொரு ரீமேக் படமான 'த்ரிஷ்யம் 2' படத்தின் ரீமேக்கும் ஓடிடியில் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படமும் ஓடிடியில் வெளியாகவே அதிக சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.