‘கரகாட்டக்காரன்’ வெளியாகி 31 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ட்விட்டர் இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
இயக்குநர் கங்கை அமரனின் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’. இதில் ராமராஜன், கனகா, கவுண்ட மணி, செந்தில், கோவை சரளா எனப் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி என எங்கும் கட்டி ஆண்டன. அத்துடன் இப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தமிழ் சினிமாவின் தரத்தில் ‘எவர்கிரீன்’ எனப் போற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தப் படம் வெளிவந்து 31 ஆம் ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆகவே அது குறித்து இயக்குநர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் #31yearsofkaragattakaran என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர், “ஃபேவரைட் படமான கரகாரட்டக்காரன் வெளியாக இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படத்தில் இசையும் காமெடியும் சிறப்பான கதை சொல்லும். இதை பார்ப்பது எப்போதும் ஒரு மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.
இப்படத்தில் கவுண்டமணியும் செந்திலும் ‘சொப்பனசுந்தரி’காரை வைத்து கொண்டு செய்த காமெடிகள் பலராலும் ரசிக்கப்பட்டது. அதேபோல் வாழைப்பழம் காமெடியை வைத்து பல காமெடிகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் இளையராஜாவின் ‘அந்தமான்.. இந்த சொந்தமான்’, ‘மாங்குயிலே பூங்குயிலே’ என்ற பாடல்கள் அதிகம் பேசப்பட்டன.
வெங்கட் பிரபுவின் பதிவை வைத்து பலரும் சமூக ஊடகத்தில் தங்களின் இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றன.