வெங்கட் பிரபு, விஜய் pt web
சினிமா

GOAT FEVER | படத்தில் அரசியல் இருக்கா? செக் வைக்கும் வெங்கட் பிரபு.. இசை வெளியீட்டு விழா எப்போது?

சமூக வலைதளங்கள் எங்கும் கோட் படத்தின் ட்ரைலரும், அதுதொடர்பான பேச்சுக்களே நிறைந்திருந்தது. அதில், விஜய்யின் அரசியல் குறித்தான பேச்சுக்களும் இருந்தன.

PT WEB

GOAT ட்ரைலர்

வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது, கோட் திரைப்படம்... 2 நிமிடங்கள் 52 நொடிகள் ஓடக்கூடிய ட்ரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன. இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இரட்டை கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் விஜய்க்கு, DEAGING தொழில்நுட்பத்தின் மூலம் புது கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. பிரசாந்தும், பிரபுதேவாவும் விஜய்க்கு நண்பர்கள் என்றும், மோகன் வில்லன் என்றும் காட்சிகளில் தெரிகிறது.

GOAT படத்தின் டிரெய்லர் வெளியானது!

காந்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் ஒரு புலனாய்வு அதிகாரி. தீவிரவாத தடுப்பு அமைப்பில் பணியாற்றும் விஜய், தாய்லாந்து தலைநகர் பேங்காக் பகுதிக்கு, குடும்பத்தோடு சுற்றுலா செல்கிறார்.. அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கதைக்களமாக்கியிருக்கிறார், இயக்குந ர் வெங்கட் பிரபு...

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்

இதற்கிடையே குண்டு வெடிப்பு, ரயில் விபத்து என கதை ஆக்ஷன் தளத்தில் பயணிக்கிறது. STUNT காட்சிகள் மிரட்டுகின்றன. இதற்கு இடையே, அப்பா - மகன் என இரண்டு விஜயும் இணைந்து பல சாகங்களை செய்கிறார்கள்... விஜயின் வழக்கமான துள்ளலும், காமெடி கலாட்டாக்களும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. வயதானால் என்ன சிங்கம் எப்போதுமே சிங்கம்தான் என வரிகளோடு நிறைவடைகிறது, கோட் படத்தின் ட்ரெய்லர்...

சமூக வலைதளங்கள் எங்கும் கோட் படத்தின் ட்ரைலரும், அதுதொடர்பான பேச்சுக்களே நிறைந்திருந்தது. அதில், விஜய்யின் அரசியல் குறித்தான பேச்சுக்களும் இருந்தன. இந்நிலையில், கோட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அரசியல் வசனங்கள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அரசியல் வசனங்கள்

அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு, “இந்த திரைப்படம் கமர்ஷியல் திரைப்படம் தான்; அரசியல் படம் கிடையாது. விஜய்யும் எந்த இடத்தில் அரசியல் இதில் பேச வேண்டுமென சொல்லவில்லை. படம் பார்க்கும் போது சில வசனங்கள் அரசியலுக்காக எழுதப்பட்டதா என யோசிக்கலாம். ஆனால், அது படத்திற்காக எழுதப்பட்ட வசனங்கள்தான்” என தெரிவித்தார்.

அதேபோல் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் கோட் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி, “நாங்கள் இன்னும் இசை வெளியீட்டு விழா குறித்து பேசவில்லை. இனிமேல்தான் அதுகுறித்து விவாதித்து திட்டமிடப்போகிறோம். பிகில் திரைப்படத்திற்கும் ஒருவாரத்திற்கு முன்புதான் திட்டமிட்டோம். ஏனெனில், இது பேன் இந்தியா படம். 3 மொழிகளில் எடுத்து வருகிறோம். அதிகமான வேலைகள் இருக்கின்றன. முதலில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு படத்தை ஒப்படைத்த பின்புதான் இதைப் பற்றி யோசிக்கவே முடியும்” என தெரிவித்தார்.