சினிமா

இதற்காகத்தான் வேதிகாவை தேர்வு செய்தேன்: ஜீது ஜோசப் விளக்கம்

இதற்காகத்தான் வேதிகாவை தேர்வு செய்தேன்: ஜீது ஜோசப் விளக்கம்

webteam

இந்தி படங்களில் நடிப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு பெருங்கனவாகவே இருக்கிறது. அப்படியொரு கனவு, வேதிகாவுக்கு நிறைவேறியிருக்கிறது. எப்படி, இப்படி!

ஸ்பானிஷ் படமான ‘த பாடி’ (The Body) யை இந்தியில் ரீமேக் செய்கிறார், மலையாள இயக்குனர் ஜீது ஜோசப். இவர் ’த்ரிஷயம்’ படத்தை இயக்கியவர். தமிழில் கமல் நடிப்பில் அதை ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்தவர்.

(த பாடி படத்தில்...)

2012-ம் ஆண்டு வெளியான இந்த ’தி பாடி’, மிரட்டும் கிரைம் த்ரில்லர் கதையைக் கொண்டது. ஓரியல் பாலோ இயக்கிய இந்தப் படத்தில் ஜோஸ் கோரோனாடோ, பெலன் ரூடா, ஹுகோ சில்வா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தியில் இதில் ஹீரோவாக நடிக்கிறார், ’சீரியல் கிஸ்சர்’ என்று அழைக்கப்படும் இம்ரான் ஹாஸ்மி! இவருக்கு ஜோடி வேதிகா.

தமிழில், முனி, காளை, பாலாவின் ’பரதேசி’, வசந்தபாலனின் ’காவியத்தலைவன்’ உட்பட சில படங்களில் நடித்த வேதிகா, இப்போது லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3, பிரபுதேவா தயாரிக்கும் வினோதன் படங்களில் நடித்துவருகிறார். இதையடுத்து இந்திக்குச் செல்கிறார். இந்தப் படத்தின் கேரக்டருக்கு வேதிகாவை தேர்வு செய்தது ஏன்? என்று கேட்டால் விளக்கம் அளிக்கிறார் ஜீது ஜோசப்.

‘இதில் ஹீரோயினுக்கு அமைதியான கல்லூரி மாணவி கேரக்டர். இந்த கேரக்டருக்கு நடிக்க நாடு முழுவதும் ஹீரோயின் தேடினோம். கடை சியில் வேதிகாதான் சரியாகப் பொருந்தினார். இந்தக் கேரக்டரில் அவரை விட்டால் மற்றவர்கள் பொருந்துவது கடினம். இம்ரான் -வேதிகா ஜோடி கண்டிப்பாகப் பேசப்படும்’ என்கிறார் ஜீது ஜோசப்! 
’த பாடி’யின் டிரைலரைப் பார்த்தால் ஹாஸ்மிக்கு அதிர்ஷ்டம்தான். இதிலும் ஏகப்பட்ட முத்தக்காட்சி இருக்கிறதே!