Ashok Selvan, Vasanth Ravi, Aishwarya Lekshmi pt web
சினிமா

“அசோக் செல்வனோ, யுவனோ.. யார்டயாச்சும் சொல்லிருக்கலாமே... இது ரொம்ப கஷ்டமா இருக்கு” வசந்த் ரவி வேதனை!

பொன் ஒன்று கண்டேன் படம் நேரடியாக கலர்ஸ் தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என்று ப்ரொமோவுடன் அறிவிப்பு வெளியான நிலையில், படத்தில் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள வசந்த் ரவி அதிருப்தி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

யுவபுருஷ்

பிரசன்னா - லைலா கூட்டணியில் ‘கண்ட நாள் முதல்’, ப்ரித்திவிராஜ் - சந்தியா - சத்யராஜ் நடிப்பில் ‘கண்ணாமூச்சி ஏனடா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பிரியா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, வசந்த் ரவி உள்ளிட்ட பலரது நடிக்க, ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற படம் தயாராகி வருகிறது.

அசோக் செல்வன், ஐஸ்வர்ய லக்‌ஷ்மி

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க அவரது ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோ தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ரொமாண்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டு தேதி போன்றவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ப்ரொமோவை வெளியிட்ட கலர்ஸ் தமிழ் டிவி சேனல், நேரடியாக தங்களது தொலைக்காட்சியில் இந்த படம் வெளியாகும் என்று நேற்று முன்தினம் (மார்ச் 13) அறிவித்தது.

இந்த அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியாகிப்போன நடிகர் வசந்த் ரவி, அதிருப்தி தெரிவிக்கும் வகையில், மிகவும் வேதனையுடன் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார்.

நேற்று (மார்ச் 14) வசந்த் ரவி தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தப் பதிவு அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மைதானா? ஜியோ ஸ்டூடியோஸ் எனும் இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா?.. பொன் ஒன்று கண்டேன் படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு அசோக் செல்வன், ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என படம் தொடர்பான எவரின் அனுமதியும் இல்லாமல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது. இந்த படத்திற்காக மிகவும் கடுமையாக நாங்கள் உழைத்துள்ளோம்.

இந்த அறிவிப்பு குறித்து பொன் ஒன்று கண்டேன் படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எதுவுமே தெரியாது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்புவோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு மிக்க நன்றி ஜியோ சினிமாஸ் (வருத்தத்துடன்).

ஒரு நடிகனுக்கோ அல்லது கலைஞனுக்கோ வணிக ரீதியான உங்களது முடிவுகளில் தலையிட முடியாது என்பது சரிதான். ஆனால், இதுபோன்ற அறிவிப்புகள் நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூகவலைதள பதிவுகள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பாக வெளியிடுவது சரியல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தரமணி, ராக்கி மற்றும் ஜெயிலர் போன்ற படங்களில் வசந்த் ரவியின் நடிப்பு மெச்சும்படியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வசந்த் ரவியின் பதிவு வைரலான நிலையில், தனது ப்ரோமோவை X தளத்திலிருந்து நீக்கியுள்ளது கலர்ஸ் தமிழ். மேற்கொண்டு படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.