ஆர்.ரவி ஷங்கர் எக்ஸ் தளம்
சினிமா

’ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’- காதலருக்கு நம்பிக்கை கொடுத்த கவிஞன்..தொலைவுக்கு அப்பால் சென்ற ரவி ஷங்கர்!

அந்த உந்துசக்தியே, இன்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டு, தொலைதூரத்திற்கு அப்பால் சென்றிருப்பதுதான் கோலிவுட் கூடாரத்தையே கலங்கச் செய்துள்ளது; கவலைகொள்ளச் செய்துள்ளது.

Prakash J

வலி நிறைந்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் சக்தி வரிகளுக்கு உண்டு. ஒரு வரியானது, மனிதனின் தலையெழுத்தை மட்டும் மாற்றுவதோடு நின்றுவிடாமல், அவனுடைய ஆனந்தத்தின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது; ஆறுதலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது. அப்படியான வரிகளை அறிமுகமில்லாதவர்கள் யார் எழுதி இருந்தாலும் அது மனித மனங்களில் ஆழப்பதிந்துவிடும். அப்படியான வரிகளுக்குச் சொந்தக்காரராக விளங்கியவர்களில் பாடலாசிரியரும் இயக்குநருமான ஆர்.ரவி ஷங்கரும் ஒருவர்.

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 1997-ல் வெளியான, ‘சூர்ய வம்சம்’ திரைப்படம் மூலம் பாடலாசிரியர் ஆனவர் ரவி ஷங்கர். இந்த திரைப்படத்தில் அவர் எழுதிய, ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ’ பாடல் இன்றும் காதல் இதயங்களின் தாலாட்டாகவும் காதலர்களின் உயிர்மூச்சாகவும் இருக்கிறது. மேலும், 90's கிட்ஸ்கள் இன்றும் முணுமுணுக்கும் பாடலாகவும் உள்ளது.

”மனசெல்லாம் பந்தலிட்டு

மல்லிக்கொடியாக ஒன்னவிட்டேன்

உசுருக்குள் கோயில் கட்டி

ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்

மழ பெஞ்சாதானே மண்வாசம்

ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்

பாதமேல பூத்திருப்பேன்

கையில் ரேகபோலச் சேர்ந்திருப்பேன்”

- என்ற வரிகள் பிரிந்த காதலர்களையும் ஒன்றிணைய வைத்தது; பிறர் பேசும்படி காதலையும் சேர்த்துவைத்தது.

இதையும் படிக்க: உ.பி|காய்ச்சலால் உயிரிழந்த சகோதரி; ஆம்புலன்ஸ் இல்லாததால் உடலை சுமந்தே சென்ற சகோதரர்கள்! #viralvideo

தொடர்ந்து வரும் அந்தப் பாடலில், மிச்சமுள்ள வரிகளும் தேனாய் இனிக்கவே செய்யும்.

”கண்ணாடி பார்க்கயில

அங்க முன்னாடி ஒம் முகந்தான்

கண்ணே நீ போகயில

கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்

நெழலுக்கும் நெத்தி சுருங்காம

ஒரு குடையாக மாறட்டுமா

மலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன்

உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்”

ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் விரும்பிப் பாடிய இந்தப் பாட்டு, இன்றும் யூடியூப்பில் பல பார்வைகளைப் பெற்று வருகிறது. தற்போதுவரை அது, 3.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம், அந்தப் பாடலின் வரிகள்தான். மேலும், இந்தப் பாட்டு ’சூர்ய வம்சம்’ படத்திற்குப் பொருத்தமாய் அமைந்திருக்கும். அதனால்தான் அப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததும் என்றும் கூறலாம்.

இதையும் படிக்க: ”ஆதார் இருந்தால் என்னைச் சந்திக்கலாம்”-தொகுதி மக்களுக்கு நிபந்தனை விதித்த கங்கனா! எதிர்க்கும் காங்.!

அந்தப் படத்திற்குப் பிறகு இயக்குநர் அவதாரம் எடுத்தார் ரவி ஷங்கர். நடிகர்கள் மனோஜ், குணால் (மறைவு) ஆகியோர் நடிப்பில் கடந்த 2002-ல் ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அவரே எல்லாப் பாடல்களையும் எழுதியிருந்தார். இந்தப் படமும் சூப்பர் ஹிட் அடித்த படங்களில் ஒன்று. ரவி ஷங்கருக்கு ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடல், எப்படி பெயர் வாங்கிக் கொடுத்ததோ, அதேபோல் இந்தப் படத்தில் இடம்பெற்ற, ’எங்கே அந்த வெண்ணிலா’ பாடலும் எல்லாக் காதலர்களையும் பாடவைத்தது; ஏக்கத்தில் தவிக்கவைத்தது.

”எனக்கென இருந்தது ஒரு மனசு

அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு

எனக்கென இருப்பது ஒரு உசுரு

அதை உனக்கென தருவது வரம் எனக்கு

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்

உன்னால் தானம்மா உன்னால் தானம்மா

இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்

உன்னால் தானம்மா உன்னால் தானம்மா”

- என்ற வரிகளைக் கேட்ட இதயங்கள்கூட, காதலில் விழ ஆரம்பித்தனர் என்றால் மிகையாகாது.

இதையும் படிக்க: ”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!

தொடர்ந்து அந்தப் பாடலில் வரும் வரிகள் காதலில் வலியை மட்டும் உணர்த்தவில்லை; கண்ணீரில் வீங்கிய கன்னத்தையும் துடைக்கவைத்தது.

”நதிகளில் மீன்கள் நீந்துதம்மா

அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா

உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா

அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா

நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன

காதல் எனக்குப் போதுமம்மா

என் காதல் எனக்கு போதுமம்மா”

- என்ற வரிகள் உண்மையான காதலை உலக காதலர்களிடம் உணர்த்திவிட்டுச் சென்றது; சென்றுகொண்டிருக்கிறது.

இப்படி ஒரு காலத்தில் காதலிலும், காதல் தோல்வியிலும் தவித்துக் கொண்டிருந்த காதல் ஜீவன்களுக்கு, இவருடைய வரிகள் ஓர் உந்துசக்தியாக மட்டுமல்ல; உத்வேகம் தந்த சக்தியாகவும் இருந்தன. ஆனால் அந்த உந்துசக்தியே, இன்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டு, தொலைதூரத்திற்கு அப்பால் சென்றிருப்பதுதான் கோலிவுட் கூடாரத்தையே கலங்கச் செய்துள்ளது; கவலைகொள்ளச் செய்துள்ளது. ஆம், சென்னை, கே.கே.நகரில் உள்ள தன் வீட்டின் அறையில் நேற்றிரவு அவர் தற்கொலை செய்துகொண்டது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகில் காதலர்களிடம் ரோசாவின் வாசத்தை விதைத்தவர் அவர், தற்கொலை முடிவை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதுதான் அவருடைய நண்பர்களின் கேள்வியாக உள்ளது.

இதையும் படிக்க: தடுமாற்றத்தின் உச்சம்| உக்ரைன் அதிபரை ‘புடின்’ என தவறாக அழைத்த ஜோ பைடன்.. அதிபர் தேர்தலில் மாற்றமா?

அவருடைய மறைவு குறித்து திரைப்பட வசனகர்த்தா கல்யாண் குமார் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ” ‘பாக்யா’ வார இதழ் ஆரம்பித்த புதிது. அதில் நான் அசோசியேட் எடிட்டர். தபாலில் வந்திருந்த சிறுகதைகளை தேர்வுசெய்து கொண்டிருந்தேன். அதில் 'குதிரை' என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி இருந்தவர் சென்னையில் வசிக்கும் ரவி ஷங்கர் என்ற ஓர் இளைஞர். உடனே ஆசிரியர் பாக்யராஜிடம் கொடுத்து, படிக்கவைத்தேன். படித்து முடித்தவர், கார் அனுப்பி அந்த இளைஞரை அழைத்துவரச் செய்தார். சிறுகதை பற்றி பாராட்டிவிட்டு, தன்னிடம் உதவியாளராகவும் சேர்த்துக்கொண்டார். ’இது நம்ம ஆளு’ உட்பட சில படங்கள் அவரிடம் வேலை செய்துவிட்டு, இயக்குநர் விக்ரமன் படங்களில் பணிபுரிந்தார், ரவி ஷங்கர்.

’சூர்யவம்சம்’ படத்தில் இடம்பெற்ற, 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் உட்பட சில பாடல்களையும் எழுதினார். பின்னர் இயக்குநராகி 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கியதோடு, அதில் எல்லாப் பாடல்களையும் எழுதி இருந்தார். அதில் 'எங்கே அந்த வெண்ணிலா' என்ற பாடல் உட்பட அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் தொடர்பையும் குறைத்துக்கொண்டார். நேற்று இரவு கே.கே.நகரில் உள்ள தன் அறையில் , தற்கொலை செய்துகொண்டார் ரவி ஷங்கர். தனிமையே அவரை கொன்றுவிட்டதாக கருதுகிறேன். ஒரு மிகப்பெரிய இயக்குநராக அல்லது பாடலாசிரியராக வலம்வருவார் என்று எதிர்பார்த்தேன். தமிழ் சினிமாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்டார். போய் வாருங்கள் ரவி ஷங்கர்... வலியோடு உங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்... ஒரு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ காற்றில் கரைந்துபோனது” என அதில் பதிவிட்டுள்ளார்.

காற்றில் கரைந்துபோன ரவி ஷங்கரை, எங்கே அந்த வெண்ணிலாவும், ரோசாபூ சின்ன ரோசாபூவும் என்றும் எப்போதும் இந்தப் பூமியும் திரை வானமும் அலங்கரித்துக் கொண்டே இருக்கும், அவர் எதிர்பார்த்த வருஷமெல்லாம் வசந்தம்போலவே!

இதையும் படிக்க: நேபாளம்| கூட்டணிக் கட்சிகள் விலகல்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி.. ஆட்சியை இழந்தார் பிரசண்டா!