பிப்ரவரி 1ம் தேதி ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்துக்கு பிறகு சிம்புவை திரையில் காணலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. தெலுங்கில் வெளியான ‘அத்திரிண்டிக்கி தாரிடி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தத் திரைப்படத்தை தமிழில் சுந்தர் சி இயக்கியுள்ளார்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்திருந்த கேரக்டரில் சிம்பு தமிழில் நடித்து வருகிறார். மேலும் இதில் கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மகத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி நாளன்று வெளியிடப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது.
பொங்கலுக்கு ‘பேட்ட’,‘விஸ்வாசம்’ திரைப்படம் திரைக்கு வரும் என்ற கூறப்பட்ட நிலையிலேயே சிம்பு நேரடியாக மோதுவதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டன. ஆனால் படத்தின் ரிலீஸ் அப்படியே சத்தமில்லாமல் போனது. இந்நிலையில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வருமா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பிப்ரவரி1ம் தேதி ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.