சினிமா

இந்த நடிகை இன்னொரு சிம்ரனாமே!

webteam

வனமகன் படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை சாயிஷா, தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு சிம்ரன் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறினார்.

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். ஹரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 50வது படம். இதன் பாடல் வெளியீட்டு விழாவில், ஹாரீஸ் 50 ஸ்பெஷல் லோகோ வெளியிடப்பட்டது. விழாவில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு கவுரவிக்கப்பட்டார்.

படத்தின் இசையை இயக்குனர் பாலா, லைகா புரொடக்‌ஷன்ஸ் ராஜு மகாலிங்கம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட, நா.முத்துக்குமார் மகன் ஆதவன் பெற்றுக் கொண்டார்.

’தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இனொரு சிம்ரன், இந்த படத்தின் நாயகி சாயீஷா. பல படங்கள் நடித்தாலும் இந்த படத்துக்கு கடினமாக உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. சோலோ காமெடியனாக மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார் தம்பி ராமையா’ என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

‘என் முதல் படத்துக்கே ஜெயம் ரவியைதான் தேடி போனேன். ஆனால் அவரை வைத்து படம் பண்ண 14 வருடங்கள் ஆகி விட்டது. இந்த படத்துக்காக இருக்கிற எல்லா காடுகளையும் தேடி போனோம். மதராசப்பட்டினம் படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜை முயற்சி செய்தேன். 7 வருடங்களுக்கு பிறகு தான் அந்த வாய்ப்பும் அமைந்திருக்கிறது, அதுவும் அவரது 50வது படம், என் படமாக அமைந்தது பெருமை’ என்றார் இயக்குனர் விஜய்.

’நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா டைரக்டர் விஜய் சாரை சந்திச்சதுக்கு அப்புறம் நிச்சயம் நான் நல்லவன் இல்லைனு உணர்ந்தேன். நான் வனமகன் அப்படின்னா, இயக்குனர் விஜய், தெய்வ மகன். இனிமேல் சாயீஷா கால்ஷீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம், இப்போவே புக் பண்ணிருங்க’ என்றார் நாயகன் ஜெயம் ரவி.