சினிமா

“என்னாது பிறந்தநாளா..? இது எப்ப..!” - “மீம்ஸ்களின் மன்னன்” ட்ரெண்டிங்..

“என்னாது பிறந்தநாளா..? இது எப்ப..!” - “மீம்ஸ்களின் மன்னன்” ட்ரெண்டிங்..

webteam

நகைச்சுவை நடிகர் ‘வைகை புயல்’ வடிவேலுவின் பிறந்த நாள் இன்று இல்லையென்றாலும், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து ட்ரெண்டாக்கியுள்ளனர்.

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் தற்போது உள்ள தலைமுறையினரின் அன்றாட நகைச்சுவைகளுள் ஒன்றாக சோஷியல் மீடியா மீம்ஸ் மாறிவிட்டது. இந்த மீம்ஸ்கள் பிரதமர், அதிபர் உட்பட அடித்தட்டு மக்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இதன்மூலம் யாரையும், எப்படிப் பட்ட திட்டங்களையும் எளிதில் கலாய்த்து (கிண்டல்) விட முடியும்.

இளைஞர்களின் அன்றாட பொழுது போக்குகளில் முக்கிய பங்கை பிடித்துள்ள இந்த மீம்ஸ்களில், தமிழ் மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படுவது யார் என்றால் அது ‘வைகைப் புயல்’ வடிவேலு தான். வடிவேலு இல்லாத மீம்ஸ்களை காணாமல் ஒரு நாள் கூட உங்களால் சோஷியல் மீடியாவை கடந்து செல்ல முடியாது. ஏனெனில் 3ல் ஒரு மீம்ஸில் அவர் இடம்பிடித்து விடுவார். அந்த அளவுக்கு மீம்ஸ் கிரியேட்டர்களின் ராஜாவாக வடிவேலு உள்ளார். 

வடிவேலுவின் அனைத்து வசனங்களும் அனைவருக்கும் மனதில் பதிந்த ஒன்றாக மாறிப்போயிள்ளது. அவரது கதாபாத்திரங்களும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது என்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் உலக அளவில் ட்ரெண்டான ‘நேசமணி’ ஓர் உதாரணம். இப்பேற்பட்ட வடிவேலுக்கு நன்றி செய்தாக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அவரது ரசிகர்கள் பிறந்த நாளை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களால் கொண்டாடுகின்றனர். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால், பிறந்த நாள் உண்மையிலேயே எந்த தேதியில் என்பது தான்.

ஏனென்றால் பெரும்பாலான நெட்டிசன்கள் பயன்படுத்தும் விக்கிப்பீடியா என்ற தகவல் தளத்தில் வடிவேலுவின் பிறந்த நாள் அக்டோபர் 10ஆம் தேதி என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஆண்டு தோறும் இந்த தினத்தில் வடிவேலுக்கு வாழ்த்துக்களை வாரி குவிக்கின்றனர் அவரது ரசிகர்கள். இதேபோன்று இன்றைய தினமும், காலை முதலே ட்விட்டர் உள்ள சமூக வலைத்தளங்களில் வடிவேலுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. சில பிரபலங்களே இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, பின்னர் உண்மையை அறிந்து நீக்கியுள்ளனர்.

உண்மையிலேயே வடிவேலுவின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தான். இதை வடிவேலுவே தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இருந்தாலும் நெட்டிசன்கள் கொண்டாடும் மீம்ஸ்களின் மன்னாதி மன்னனுக்கு எந்நாளும் சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் தான் என்றால் அது மிகையாகாது.