mankatha song PT
சினிமா

மங்காத்தா| யுவன் - வாலி நிகழ்த்திய மேஜிக்.. காவியத்தன்மை வாய்ந்த ’என் நண்பனே’ பாடல் - இசை பொக்கிஷம்!

மங்காத்தா திரைப்படமானது எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு வெற்றிப்படமாக நடிகர் அஜித்திற்கு இருந்துவரும் நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் அதுஒரு பொக்கிஷமான படமாகவே அமைந்ததது.

Rajakannan K

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கும் இன்று முக்கியமான நாள். ஆம், தமிழ் ரசிகர்களால் இசையின் இளவரசன் என்று அன்போடு கொண்டாடப்படும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள். மற்றும் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்த மங்காத்தா படம் வெளியான 13 ஆம் ஆண்டு. மங்காத்தா படத்திற்கு யுவன் தான் இசை அமைத்திருந்தார்.

மங்காத்தா படத்தில் வெங்கட் பிரபுவின் இயக்கம், அஜித்தின் அப்பியரன்ஸ், நெகட்டிவ் ஆக்டிங், யுவனின் இசை என பலவும் கொண்டாடப்பட்டுள்ளது. பாடல்களை பொறுத்தவரை தீம் மியூசிக் உட்பட மொத்தம் 8 டிராக் இருக்கிறது. இதில் தீம் மியூசிக், பாடல்களை விடவும் அதிகம் கொண்டாடப்பட்டது.

yuvan shankar raja

பாடல்களை பொறுத்தவரை விளையாடு மங்காத்தா மற்றும் மச்சி ஓபன் தி பாட்டில் அஜித் ரசிகர்கள் தெறியான சாய்ஸ். அதேபோல், வாடா பின் லேடா பாடல் செம்ம வைஃப் ஆக இருக்கும். கண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடல் காதல் ரசம் பொங்கும் ரசனையில் இருக்கும். இப்படி மங்காத்தாவில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதிகம் கவனிக்கப்படாத பாடலாக ஒரு சிலரின் பேவரட் பாடலாகவும் இருப்பது தான் “என் நண்பனே பாடல்..”. ஆம், இந்தப்பாடலைப் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். அப்படி என்ன இந்தப் பாடலில் இருக்கிறது என்று நினைக்கலாம்.. ஆம், என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் காவியம் தன்மை இந்தப் பாடலில் இருக்கிறது. இதனை பாடலை எழுதிய வாலியே அகம் மகிழ்ந்து சொல்லி இருக்கிறார்.

என் நண்பனே எனும் பொக்கிஷம்..

அதற்கு முக்கிய காரணம், சினிமாவில் காதல் தோல்வியில் ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களே அதிகம். பெண்கள் தங்கள் உணர்வுகளை கொட்டித் தீர்க்கும் வகையில் பாடல்கள் இடம்பெறுவது மிகவும் அரிது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற ’எங்கே எனது கவிதை’ போன்ற பாடல்கள் அத்திப் பூத்தார் போல் அமையும்.. அதுவும் கவித்துவத்தோடு.. அப்படியான ஒரு கவித்துவமான பாடலை தான் கவிஞர் வாலி செதுக்கி கொடுத்து இருப்பார். மிகவும் கடினமான ஒரு மெட்டிற்கு எளிய வார்த்தைகளால் ஆயிரம் மடங்கு அர்த்தங்களை கூட்டி இருப்பார்.

மங்காத்தா பாடல்

படத்தில் நாயகன் நாயகியை நம்பவைத்து ஏமாற்றிய தருணத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். எப்படி தன்னை நாயகன் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான் என்பதை வார்த்தைகளில் காவியமாய் வடித்து இருப்பார் வாலி. அவர் வாலி அல்லவா வார்த்தைகள் சும்மாவா வந்து விழும்.

பாடலின் தொடக்கத்தில் 40 நொடிகளில் வரும் முன்னூட்டு இசையே அந்த உணர்வு தளத்திற்கு நம்மை இட்டுச் சென்றுவிடும்.

மங்காத்தா

பாடலின் பல்லவியில்,

என் நண்பனே என்னை ஏய்த்தாய்.. ஒ..

என் பாவமாய் வந்து வாய்த்தாய்..

உன் போலவே நல்ல நடிகன்.. ஒ..

ஊரெங்கிலும் இல்லை ஒருவன்..

நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ..

கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே..

கங்கை நதியல்ல கானல் நதியென்று

பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..?” இந்த வரிகள் இடம்பெற்றிருக்கும்.

என்கிட்ட எப்படியெல்லாம் நடிச்சு இருக்க.. நல்லவங்க யாரு, தீயவர்கள் யாரு என்று தெரியவில்லையே.. என்று ஏமாற்றம் அடைந்த பெண் வேதனைகளை வெளிப்படுத்துவது போல் இருக்கும். கங்கை நதி, கானல் நதி உவமை அவ்வளவு அருமையானது. கங்கை நதியில் அவ்வளவு நீர் ஓடும். ஆனால், கானல் நீர் என்பது இருப்பது போல் தோன்றும் ஆனால், ஆனால் நெருங்கினால் அப்படி எதுவுமே இருக்காது.

சரணத்திற்கு தனித்துவமான இசை..

பல்லவி முடிந்த உடன் யுவனின் குரலில் தனித்து சில வரிகள் வரும். அது அந்த நாயகிக்கு வெளியில் இருந்து உண்மையை உணர்த்துவது போல் இருக்கும்.

காதல் என்பது கனவு மாளிகை..

புரிந்துகொள்ளடி.. என் தோழியே..!!

உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..

காணவில்லையே என் தோழியே..!!” இவைதான் அந்த வரிகள். உண்மைக் காதலே இல்லையோ என்று எண்ணும் அளவிற்கு வேதனையை இந்த வரிகள் வெளிப்படுத்தும்.

மங்காத்தா பாடல்

சரணத்திற்கு தனித்துவமான இசை மெட்டுகளை அமைத்திருப்பார் யுவன். ஆனால் அதற்கு வாலி மிரண்டு போகும் அளவில் வரிகளை கொடுத்து இருப்பார். ஒவ்வொரு வரியும் அப்படி தீயாக பொருள் பொதிந்ததாக இருக்கும்.

வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன்..’ என்று காதலில் விழுந்தேன் என்பதை சட்டென்று சொன்னவர், ‘வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்..’ திருமணம் முடிக்க நினைத்தேன் என்பதை அடுத்த வரியில் அழுத்தமாக சொல்லியிருப்பார்.

உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்..

எழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை’ என்று எல்லாமே தப்பாக இருந்திருக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருப்பார். எப்படி என்றால் ’முதல் வரி முதல் முழுவதும்’ என்று ஒட்டுமொத்தத்தையும் சுருக்கமாக சொல்லிவிடுகிறது.

மங்காத்தா பாடல்

ஏமாற்றம் அடைந்ததால் சோகம் அடைந்த பின்னர் கண்ணீர் வரிகள் வரும். ஆனால், ‘விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்..’ என்று காயத்தின் ஆழத்தை சொல்லும்.

இதுவா உந்தன் நியாயங்கள்..? எனக்கேன் இந்த காயங்கள்..?’ என்று ஆதங்கத்தை கொட்டிவிட்டு ‘கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ..’ என்று கவித்துவமான ஒரு வார்த்தையை எழுதியிருப்பார் வாலி.

‘முருகன் முகம் ஆறுதான்..

மனிதன் முகம் நூறுதான்..

ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ..’ என்பதெல்லாம் எளிமையான வரிகள் தான். ஆனால், மனிதர்களின் மோசடியாக முகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்.

மங்காத்தா பாடல்

“காதல் வெல்லுமா காதல் தோற்குமா?

யாரும் அறிந்ததில்லையே என் தோழியே..

காதல் ஓவியம் கிழிந்துபோனதால்

கவலை ஏனடி இதுவும் கடந்திடும்..” என்று கடந்து போகவும் ஆறுதல் கொடுக்கிறார் வாலி.

“அடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன்..

அன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன்..” இந்த வார்த்தைகளை எத்தனை முறை கேட்டாலும் எப்படி சிலிர்த்து போகும். எப்படி இவ்வளவு எளிமையாக கவிநயம் மிக்க வரிகளை எழுத முடியும் என்று தோன்றும்.

‘என் நண்பனே’ பாடல் காதல் தோல்வியில் வாடிய பலருக்கும் அருமருந்து!

“புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு.. உனக்கென்ன தெரியும்..

என் இதயத்தில் வந்து விழுந்தது இடி

இள மனமெங்கும் எழுந்தது வலி..

யம்மா யம்மா..

உலகில் உள்ள பெண்களே.. உரைப்பேன் ஒரு பொன்மொழி..

காதல் ஒரு கனவு மாளிகை.. ஒ…

எதுவும் அங்கு மாயம்தான்.. எல்லாம் வர்ணஜாலம்தான்..

நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!!” என்று விரக்தியில் இரண்டாவது சரணம் முடியும்..

இந்த சரணத்தில் ’புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு’ என்ற வார்த்தைகள் ஆழமான அர்த்தங்களை கொண்டது. மரம் என்று உயிருள்ள பொருள்.. விறகு என்பது உயிரற்றது. தன்னிடம் இருந்த உயிர் பிரிந்து வெறும் ஜடமாக இருப்பதை உணர்த்தும் வகையில் இந்த வார்த்தைகள் இருக்கும்.

என் நண்பனே பாடல்

‘என் நண்பனே’ பாடல் காதல் தோல்வியில் வாடிய பலருக்கும் அருமருந்தாக அமைந்த ஒன்று. இசையும், பாடல் வரிகளும் ஒருசேர மனத்தை வருவிடும். வாலியின் தமிழ் இலக்கிய விருந்தும் தெகட்டாத ஒன்று. காலம் கடந்தும் இந்த பாடல் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.