ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் டிக்கர் பாடா என்ற கிராமத்தில் மொச்சி ராம் என்பவரின் ஒரு மாத குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவரது மாமாவே வயிற்றில் இரும்புக் கம்பியை காய்ச்சி சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறு வலியைக்கூட தாங்காத பச்சிளம் குழந்தையின் உடம்பில் கம்பியை வைத்தால் எப்படி தாங்கும்? உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது குழந்தையின் உடல்நிலை சீராகியுள்ளது.
இதுகுறித்து, காவல்துறையினர் குழந்தையின் மாமாவை கைது செய்யவில்லை. காரணம், மிகவும் பின்தங்கியப் பகுதியான இக்கிராமத்தையும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளிலும் மருத்துவமனைகள் இல்லை. அதனால், இப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே குழந்தைகளுக்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் ஏற்படக்கூடாது என்று வயிற்றில் கம்பி காய்ச்சி சூடு வைக்கும் பழக்கத்தினை தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற மூட நம்பிக்கை பழக்க வழக்கங்கள் தெலங்கானா மாநிலத்திலும் சில கிராமங்களில் தொடர்கின்றன. இரும்புக் கம்பியால் சூடு வைப்பதால் குழந்தைகளின் இறப்பும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அரசும் காவல்துறையும்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.