உதயநிதி ஸ்டாலின் - நடிகர் சூர்யா  கோப்பு புகைப்படம்
சினிமா

“அந்த வசனத்தை வச்சிருக்கக்கூடாது; சூர்யா அப்போவே சொன்னாரு”- 7ம் அறிவு ‘ரிசர்வேஷன்’ குறித்து உதயநிதி

'ஏழாம் அறிவு' படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சித்து இடம்பெற்ற காட்சியை நீக்கும்படி நடிகர் சூர்யா தன்னிடம் பேசியதாக கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Justindurai S

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் 'ஏழாம் அறிவு'. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் சூர்யாவின் திரைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

ஏழாம் அறிவு

'ஏழாம் அறிவு' படம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியின் தீவிரம் புரியாமல் தான் இருந்ததாக நேர்காணல்களில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், “ஏழாம் அறிவு படத்தில் சமூக நீதியை விமர்சித்து ஸ்ருதிஹாசன் பேசும் வசனம் இருந்தது. அப்போ எனக்கு அரசியல் புரிதல் கிடையாது. இதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அவரோட அரசியல் புரிதலில் அந்த வசனத்தை வைத்திருந்தார்.

நான் சூட்டிங்கிலும் இதை பார்க்கவில்லை; சீன் பேப்பரும் எனக்குத் தெரியாது. குறிப்பிட்ட அந்த காட்சியில் சூர்யாவும் கிடையாது. டப்பிங்கில் பேசும்போதும் அப்படியொரு வசனம் வருவது சூர்யாவுக்கு தெரியாது. ஆனால் ரிலீஸ்க்கு முன்னாடி படத்தை முழுசா பார்த்துட்டு சூர்யா எனக்கு போன் பண்ணினார். 'படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்து ஒரு சீன் வருது. அது வேணாம் எடுத்துடுங்க' என சூர்யா சொன்னார். நான் 'ஒரு சின்ன வசனம்தானே.. விட்டுடுங்க பாஸ்' என சொல்லிட்டேன்.

ஏ.ஆர்.முருகதாஸ்

அப்போ என்னோட அரசியல் புரிதல் அவ்வளவுதான் இருந்தது. ஆனால் சூர்யாவுக்கு அரசியல் புரிதல் இருந்தது. ஆனால் இப்போ யோசிச்சு பார்க்கும்போதுதான் நான் அதை அனுமதித்திருக்கக்கூடாதுன்னு தோணுது. 'ஏழாம் அறிவு' படத்துல நான் அந்த டையாலக்கை வைச்சிருக்கக்கூடாது” என கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த வசனத்தில், ரிசர்வேஷனால் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது என சொல்லப்பட்டிருக்கும்.