சினிமா

'சாதாரண கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா?' - நடிகர் செந்தில் புகார்

'சாதாரண கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா?' - நடிகர் செந்தில் புகார்

kaleelrahman

'சாதாரண கணக்கே எனக்கு தெரியாது, ட்விட்டர் கணக்கு பற்றி எப்படி? ' போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகைச்சுவை நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளி;த்துள்ளார்.

திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் வேப்பேரியில் உள்ள சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு இன்று தனது வழக்கறிஞருடன் வந்து புகார் கொடுத்துள்ளார். புகாரில், 'நான் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகாலமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஜூன் 12-06-2021 அன்று எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சிலர் நான் பதிவு செய்ததுபோல் தமிழக அரசின் மீதும் தமிழக முதல்வர் மீதும், அவதூறான கருத்துக்களை ட்விட்டரில் போலியாக பதிவிட்டுள்ளார்கள்.

எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியான பதிவுகளை பதிவு செய்த நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் கடந்த ஜுன் 12-06-2021 அன்று எனது போலியான பெயரில் வெளியான ட்விட்டர் பதிவை நீக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் நடிகர் செந்தில் கூறுகையில், "எனக்கு ட்விட்டர், முகநூல் கணக்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. நான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. சாதாரண கணக்கே தெரியாது டுவிட்டர் கணக்கை பற்றி நான் எங்கே? (என சிரித்தவர் தொடர்ந்து...) . எனது நண்பர்கள் மூலம் எனது பெயரில் யாரோ போலியான கணக்கை ட்விட்டரில் துவங்கியுள்ளதை அறிந்தேன். டாஸ்மாக் திறப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூட கோரிக்கை வைத்ததுபோல் அந்த ட்விட்டர் கணக்கில் பதிவிடப்படப்பட்டுள்ளது. அதை நான் செய்யவில்லை.

நான் உண்டு எனது வேலை உண்டு என சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்று அடையாளம் தெரியாத சிலர் செய்யும் வேலைகள் மனஉளைச்சலை தருகிறது. போலி கணக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்துள்ளனர்” என்றார்.

இதையடுத்து போலி டுவிட்டர் கணக்கை நீக்கம் செய்யக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மூலம் ட்விட்டர் நிறுவனத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் சார்லியும் இதேபோன்று தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக புகார் அளித்த நிலையில், அரை மணி நேரத்தில் அந்த போலி ட்விட்டர் நீக்கம் செய்யப்பட்டது. காவல்துறையினரின் இந்த துரிதமான நடவடிக்கைக்கு அவர் நன்றியும் தெரிவித்து இருந்தார்.

-சுப்ரமணியன்