மாணவர்களுடன் விஜய் புதியதலைமுறை
சினிமா

”10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தம்பி, தங்கைகளுக்கு ..” - தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை

நாளை முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், தேர்வை எழுத இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகரும், தவெக தலைவருமான விஜய்.

யுவபுருஷ்

10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக பொதுத்தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. நாளை முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. முதல் நாளான நாளைய தினம் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. மொத்தமாக 12,616 பள்ளிகளில் இருந்து சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுத இருக்கின்றனர்.

தேர்வை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் மட்டும் சுமார் 48 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க சுமார் 4, 500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும்

நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மார்ச் ஒன்றாம் தேதி 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கின. அன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட த.வெ.க தலைவர் விஜய், “இன்றிலிருந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்

என் அன்பு தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றிபெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.