’எங்க அந்த ஆட்டோக்கார தம்பி’ என்ற சினிமா வசனத்திற்கு ஏற்றார்போல், சென்ற இடமெல்லாம் சர்ச்சைகள், சிக்கல்கள், காவல் புகார்கள் என சந்தித்துவந்தவர்தான் 2K கிட்ஸ்களின் ஃபேவரட் நபரான பைக்கர் டிடிஎஃப் வாசன்.
டிடிஎஃப் வாசனை அவரது ரசிகர்களையும் தாண்டி ஒருவர் கொண்டாடினார் என்றால், அது மஞ்சள் வீரன் பட இயக்குநர் செல்அம்தான். ஆனால் அந்த இயக்குநரே, தன் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்கியதாகவும், அது டிடிஎஃப் வாசனுக்கே தெரியாது என்றும் அறிவித்ததுதான் வாசன் ரசிகர்களுக்கு (!) அதிர்ச்சியாக அமைந்தது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ‘மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ அறிவிக்கப்படுவார்’ என்று குறிப்பிட்டிருந்த அப்படத்தின் இயக்குநர் செல்அம், “ ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து நானும் வாசனும் பிரிந்துள்ளோம். இதுபற்றி இன்னும் அவரிடம் (வாசனிட) தகவல் தெரிவிக்கவில்லை. மற்றபடி தம்பி என்கிற உறவு அவருடன் எனக்கு தொடரும். இது ஒரு வாழ்வியல் படம். என்கூடவே என் ஹீரோ பயணிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை என்பது மட்டும்தான் இந்த முடிவுக்கு காரணம். வரும் அக்டோபர் 15 ஆம் தேதி புதிய கதாநாயகனை அறிமுகப்படுத்துகிறேன்” என தெரிவித்தார்.
இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்திலிருந்து தன்னை நீக்கியதை அறிந்த டிடிஎஃப் வாசன், வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் டிடிஎஃப் வாசன், அதில் “மஞ்சள் வீரன் படத்திலிருந்து விலக சொன்னால் நானே விலகியிருப்பேன். இப்படி அண்ணன் அண்ணன் என்று சொல்லி மலிவான விளம்பரத்திற்கு என்னை பயன்படுத்திக் கொண்டார்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அந்த வீடியோவில் பேசியிருக்கும் டிடிஎஃப் வாசன், “என்னிடம் இப்போது வரை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இயக்குனர் செல்அம் தெரிவிக்கவே இல்லை. நான் தொடர்புகொண்டாலும் அவர் பேசவே தயாராக இல்லை. என்னிடம் சொல்லியிருந்தால் நானே ஒத்துக்கொண்டு விலகியிருப்பேன். ஆனால் படப்பிடிப்பு நடத்தாமலேயே அதற்கு நான் வரவில்லை என்று நேரடியாக பத்திரிகையாளர்களிடம் கூறியது மிகப்பெரிய தவறு. அண்ணன் அண்ணன் என்று சொல்லிக்கொண்டு மலிவான விளம்பரத்திற்காக என்னை அவர் பயன்படுத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதுபோலான ஒரு பச்சதுரோகத்தை நான் பார்த்ததே கிடையாது” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.